30 ஆண்டு பணி நிறைவு செய்தவர்களுக்கு கட்டாய ஓய்வு: துறைவாரியாக தமிழக அரசு ஆய்வு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 50 வயதானவர்கள் அல்லது 30 ஆண்டு பணிக்காலத்தை நிறைவு செய்தவர்களுக்கு, கட்டாய ஒய்வு அளிக்க   தமிழக அரசுத் துறைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 12 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர்.

ஆண்டுதோறும் பணி மூப்பு அடிப்படையில் ஆயிரக்கணக்கானவர்கள் ஓய்வுபெற்று வருகிறார்கள். அதே நேரத்தில் புதியவர்கள் தேர்வு செய்யப்பட்டு காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன.

இது ஒருபுறம் இருக்க,வயது மற்றும் பணி செய்த ஆண்டுகள் அடிப்படையில், தகுதியற்றவர்களாக கருதுபவர்களை பணி நீக்கம் செய்வதற்கான ஆய்வு தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த சில மாதங்களாகவே அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில், 50 வயது நிறைவு செய்த அரசு ஊழியர்கள்,  அடிப்படை பணியாளர்களாக இருந்தால் 55 வயது நிறைவடைந்தவர்கள் அல்லது 30 ஆண்டு பணிக்காலத்தை முடித்தவர்கள் என இவற்றில் எது முதலில் நிகழ்கிறதோ அவர்களது விவரம் ஆய்வு செய்து, தகுதியற்றவராக கருதும் பட்சத்தில் அவருக்கு கட்டாய ஒய்வு அளிக்க முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் பரவின.

இந்த தகவல்கள் தற்போது வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சுற்றறிக்கை மூலம் உண்மையாகியுள்ளது.

மண்டலவேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கான இந்த சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:பணியாளர் அடிப்படை விதி 56 (2) ன் கீழ் கட்டாய ஓய்வு குறித்த ஆய்வு மேற்கொள்ளும் வகையில் அலுவலர்களின் பதிவுறு நாட்கள் மற்றும் உரிய விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும்.

அதாவது அ, ஆ, இ பிரிவு அலுவலர்கள் கடந்த 1969 ஜன 1 முதல் டிசம்பர் 31 வரையுள்ள காலத்தில் பிறந்த தேதியைக் கொண்ட அலுவலர்கள், கடந்த 1964 ஜனவரி 1-ம் தேதி முதல் அந்த ஆண்டு டிசம்பர் 31-ம்தேதி வரை பிறந்த நாளுடைய அலுவலர்களும் ஆய்வு செய்யப்பட வேண்டியுள்ளது.

மேலும் கடந்த 1989-ம் ஆண்டு ஜன.1-ம் தேதி முதல் அந்த ஆண்டில் டிசம்பர் 31-ம் தேதி வரையிலான காலத்தில் பணி நியமனம் செய்யப்பட்டு, 30 ஆண்டுகள் பணி முடித்த அலுவலர்களும் ஆய்வு செய்யப்பட வேண்டியவர்களாவர்.

அதன்படி, 55 வயது பூர்த்தியடைந்த அடிப்படை பணியாளர்கள், 50 வயது நிறைவடைந்த மற்ற பணியாளர்கள் அல்லது30 ஆண்டுகள் பணிக்காலத்தை முடித்தவர்கள் என இதில் முதலில்எது நிகழ்கிறதோ அந்த அலுவலர்ஆய்வு செய்யப்பட வேண்டியவராவார்.

எனவே, உரிய அலுவலரின் விவரங்களை அனுப்பி வைக்க வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.