குற்றம் நடந்த இடத்திலேயே என்கவுண்டர் செய்யப்பட்ட பாலியல் கொலை குற்றவாளிகள்: நடந்தது என்ன?

ஐதராபாத் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொல்லப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் நான்கு போரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றுள்ளனர்.

குற்ற சம்பவம் நடந்த அதே இடத்தில் குற்றவாளிகள் நான்கு பேரும் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதற்கு, ஒரு சில எதிர்ப்புகள் இடுந்தாலும், நாடு முழுவதும், பல்வேறு தரப்பில் இருந்து போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தெலுங்கானா  மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள ஷம்சாபாத்தில் கடந்த மாதம் 27-ம் தேதி   26 வயதான பெண் கால்நடை மருத்துவர் ஒருவர், லாரி ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்பட நான்கு பேரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

பின்னர் அவர்  மூச்சு திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். அவரது உடல் தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று  நாடாளுமன்றத்திலும் பலமாக குரல்கள் ஒலித்தன.

குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, பல்வேறு அரசியல் கட்சிகளும், சமூக ஆர்வலர்களும்,  மாணவர்களும் ஆர்ப்பாட்டம் மற்றும் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

இந்த வழக்கில் குற்றவாளிகளான, சிவா,சென்ன கேசவலு, முகமது ஆரிப், நவீன் ஆகிய நான்கு பேரையும், 48 மணி நேரத்தில் போலீசார் கைது செய்தனர்.  வழக்கை விசாரிக்க தெலுங்கானா அரசு விரைவு நீதிமன்றமும்  அமைத்திருந்தது.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட 4 பேரையும் காவலில் எடுத்து விசாரித்து வந்த போலீசார், இன்று அதிகாலை குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, காவலர்களை தாக்கிவிட்டு குற்றவாளிகள் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் போலீசார் அவர்கள் நான்கு பேரையும் என்கவுண்ட்டரில் சுட்டுக் கொன்றனர்.

சுட்டு கொல்லப்பட்ட பின்னர் நான்கு பேரின் சடலங்களும் ஷத்நகர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.

இதனிடையே, குற்றவாளிகள் நான்கு போரையும் போலீசார் என்கவுண்டரில் சுட்டு கொன்ற சம்பவத்திற்கு கல்லூரி மாணவிகள் பாராட்டு தெரிவித்தனர்.

குற்றவாளிகள் நான்கு பேர் சுட்டுக்கொல்லப்பட்டது மகிழ்ச்சி அளிப்பதாக டெல்லி மருத்துவ மாணவி நிர்பயாவின் தாயார் கருத்து தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகள் 4 பேரையும் என்கவுண்ட்டர் செய்த போலீஸ் அதிகாரிகள் மீது எந்த நடவடிகையும் எடுக்க கூடாது என்று நிர்பயாவின் தாய் வலியுறுத்தியுள்ளார்.

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர்கள், இது பற்றி கூறும்போது, எங்கள் மகள் இறந்த பத்து  நாட்களில், குற்றவாளிகள் என்கவுண்ட்டர் செய்யப் பட்டிருப்பதற்காக தெலுங்கானா அரசுக்கும், காவல்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளனர். தமது மகளின் ஆத்மா, இப்போதுதான் சாந்தி அடையும் என்றும் அவர்கள் கூறி உள்ளனர்.