கொண்டாடப்படும் ஹைதராபாத் என்கவுன்ட்டர்:  உலக அளவில் ட்ரெண்டாகும் ஹேஷ்டேக், டுவிட்டுகள்!

ஐதராபாத் என்கவுண்டர் விவகாரத்தில் போலீசாருக்கு பொது மக்களின் ஆதரவு பெருகி வருகிறது. இதை உலக அளவில் டிரென்ட் ஆகி வரும் ஹெஷ்டேக் மற்றும் டுவிட்டர் பதிவுகள் உறுதிப்படுத்துகின்றன.

டெல்லி நிர்பயா வழக்குக்குப் பின் நாடெங்கும் பலத்த கண்டனத்துக்குள்ளான இந்த வழக்கில் அடுத்த 48 மணிநேரத்தில் லாரி ஓட்டுநர் முகமது பாஷா, கேசவலு, சிவா, நவீன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் நான்கு பேரும் போலீஸ் என்கவுண்டரின், குற்ற சம்பவம் நடந்த அதே இடத்தில் இன்று காலை சுட்டுக்கொல்லப்பட்டனர்.

காவல்துறையின் இந்த நடவடிக்கையை நாடெங்கும் பொதுமக்கள் போற்றி  வருகின்றனர். ஹைதராபாத் போலீஸாருக்கு உள்ளூர் தாண்டி வெளி மாநிலங்களிலும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

காலை முதல் பலரும் என்கவுன்ட்டர் குறித்து பல்வேறு கருத்துகளைப் பதிவு செய்ததால் #Encounter, #hyderabadpolice, #justiceforpriyanakareddy, #JusticeForDisha ஆகிய ஹேஷ்டேகுகள் ட்ரெண்டாகி வருகின்றன.

தெலங்கானா போலீஸிடம் பாடம் கற்றுக்கொள்ளுங்கள்: உ.பி. போலீஸுக்கு மாயாவதி ஆலோசனை கூறியுள்ளார்.

ஜெய் தெலங்கானா போலீஸ் என்று பாஜக மூத்த தலைவர் உமா பாரதி ட்விட்டரில் பாராட்டியுள்ளார்.

சல்யூட் ஹைதராபாத் போலீஸ்: தெலங்கானா என்கவுன்ட்டரைப் பாராட்டி சாய்னா நேவால் ட்வீட் செய்துள்ளார்.

வக்கிர புத்தி கொண்டவர்களுக்கு இதுவொரு பாடம் என்று ஹைதராபாத் என்கவுன்ட்டருக்கு டுவிட்டரில் பாராட்டு தெரிவித்துள்ளார் நடிகர் விவேக்.

என்கவுண்டர் நடத்திய போலீஸ் அதிகாரிகளை மலர் தூவி வாழ்த்திய பொதுமக்கள், அவர்கள் மீது பூக்களை தூவி, தங்கள் அன்பை வெளிப்படுத்தி உள்ளனர். சில பெண்கள், போலீசார் கைகளில் ராக்கி கயிறு கட்டி தங்களது சகோதர பாசத்தை காட்டியுள்ளனர்.

எனினும், ஜனநாயக நாட்டில் குற்றவாளிகளை, நீதிமன்றத்தில் நிறுத்தியே தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லியில் கருத்து தெரிவித்த அம்மாநில முதல்வர்  அரவிந்த் கேஜ்ரிவால்,  ஹைதராபாத், உன்னாவோ போன்று அண்மைக் காலமாக வெளிச்சத்துக்கு வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மக்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் காரணமாகவே அவர்கள் தெலங்கானா என்கவுன்ட்டர் குறித்து மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர்.மக்களுக்கு குற்றவியல் நீதித் துறையின் மீது அவநம்பிக்கை வந்துவிட்டது.

இது வருந்தத்தக்கது. அனைத்து அரசுகளும் ஒன்றிணைந்து குற்றவியல் நீதித் துறையை வலுப்படுத்தும் தருணம் வந்துவிட்டது என்று கூறியுள்ளார்.