நித்யானதாவுக்கு அடைக்கலம் தர ஈக்வடார் மறுப்பு: ஹைதி நாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல்!

நித்யானந்தாவுக்கு ஈக்வடார் நாடு அடைக்கலம் தர மறுத்ததால், அவர் அங்கிருந்து ஹைதி நாட்டுக்கு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகி உள்ளது.

நித்யானந்தாவுக்கு தீவு எதையும் விற்கவில்லை. இது குறித்து அவரது இணைய தளத்தில் வெளியான தகவல்கள் அனைத்தும் தவறானவை என்று ஈக்வடார் தூதரகம் தெரிவித்துள்ளது.

கடத்தல் புகார் தொடர்பாக, அகமதாபாத் நித்யானந்தா ஆசிரமத்தில் போலீஸார் கடந்த மாதம் சோதனை நடத்தினர்.

சோதனையில், அங்கு ஏராளமான சிறுமிகள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து, நித்யானந்தா மீது கடத்தல் பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

அத்துடன், முன்னாள் பெண் பக்தர்கள் சிலரும் நித்யானந்தா மீது பாலியல் புகார் அளித்தனர். எனவே, பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் போலீசார் நித்யானந்தாவை தேடி வந்தனர்.

அவர்,  தென் அமெரிக்க நாடான ஈகுவடாரில் தலைமறைவாக உள்ளதாக தகவல் வெளியானது. அதனால், வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் உதவியுடன் அவரை போலீசார் கைதுசெய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், ஈகுவடாரில் ஒரு தனித் தீவினை விலைக்கு வாங்கி அதனை “கிளாசா” என்ற தனி நாடாக நித்யானந்தா அறிவித்திருப்பதாகவும், அதற்கான அரசாங்க நடைமுறைகள் அனைத்தும் வகுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாயின.

இந்நிலையில், ஈகுவடாரில் நித்யானந்தா தனிநாடு உருவாக்கியுள்ளதாக வெளியான தகவலை அந்நாடு திட்டவட்டமாக மறுத்துள்ளது.

இதுகுறித்து டெல்லியில் உள்ள ஈகுவடார் தூதரகம் சார்பில் நித்யானந்தாவுக்கு ஈகுவடாரில் அடைக்கலம் ஏதும் தரப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், ஈகுவடார் அருகே தீவு எதையும் விற்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையதளங்களில் வெளியிடப்பட்டு வரும் தகவல்கள் தவறானவை என்றும்   கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தம்மை அகதியாக ஏற்று பாதுகாப்பு அளிக்கும்படி நித்யானந்தா விடுத்த கோரிக்கையை ஏற்க ஈகுவடார் மறுத்துவிட்டதாகவும், அதனால் அவர் ஈகுவடாரில் இருந்து, ஹைதி நாட்டுக்கு தப்பிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது.