பிரசாந்த் கிஷோருடன் கைகோர்த்த திமுக: வரும் சட்டமன்ற தேர்தலில் வென்று  ஸ்டாலின் முதல்வர் ஆவாரா?

 திமுக தலைவரான ஸ்டாலினுக்கு, நமக்கு நாமே நடைபயணம் முதல், கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வரை வியூகம் வகுத்து கொடுத்தவர் சுனில்.

சுனில் வகுத்து கொடுத்த வியூகங்கள் அனைத்தும், திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் கட்சியின் இமேஜை உயர்த்தி பிடித்ததில் முக்கிய பங்கு வகித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், அண்மையில்  விக்கிரவாண்டியில் நடந்த இடைத்தேர்தலில், அவர் வகுத்துக் கொடுத்த வன்னியர் அரசியல் வியூகம், எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி விட்டதாக சொல்லப்படுகிறது.

எனினும், சுனிலை இழக்க விரும்பாத திமுக, புதிதாக ஒப்பந்தம் செய்யவுள்ள பிரசாந்த் கிஷோர் குழுவில் இணைந்து பணியாற்றுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால், அந்த குழுவில் இணைந்து விரும்பாத அவர், பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு பிரச்சாரம் உள்ளிட்ட பல்வேறு  வியூகங்களை வகுத்துக் கொடுக்கும் பொறுப்பு, தற்போது பிரசாந்த் கிஷோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் இறுதி செய்யப்பட்டுவிட்டதாக தெரிகிறது.

பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ்குமார், ஆந்திர முதல்வர் ஜகன்மோகன் ரெட்டி ஆகியோருக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்ததால், இந்தியா முழுவதும் பிரபலம் அடைந்தவர் பிரசாந்த் கிஷோர்.

ஆனாலும், ராகுல்காந்திக்கும், சிவசேனா கட்சிக்கும் இவர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் பெரிய அளவில் கைகொடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு.

எனினும், வரும் சட்டமன்ற தேர்தலில், திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க, பிரசாந்த் கிஷோரின் வியூகமே பின்பற்றப்பட உள்ளது.

பிரசாந்த் கிஷோரின் அரசியல் வியூக குழுவில் 150  உறுப்பினர்கள் இருப்பதாகவும், அவர்கள் அனைவரும் உடனடியாக தங்களது பணிகளை தொடங்கி விடுவார்கள் என்றும் திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளிகள் கூறுகின்றனர்.

கருணாநிதி, ஜெயலலிதா என இருவருமே இல்லாத நிலையில், இவ்விரு கட்சிகளும், முதன்முதலாக பொது தேர்தலை சந்திக்க உள்ளன.

திமுகவை பொறுத்தவரை, தொடர்ந்து இரண்டு தேர்தலாக ஆட்சியை பிடிக்க முடியாமல் போய் விட்டது. எனவே, இந்த தேர்தலில் கட்டாயமாக ஆட்சியை பிடிக்க வேண்டிய நிர்பந்தம் அதற்கு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா இல்லாத நிலையில், அதிமுகவை வெல்ல முடியாமல் போனால், திமுகவுக்கு அது மிகுந்த அவமானமாக இருக்கும்.

ஆகவே, கண்டிப்பாக வரும் சட்டமன்ற தேர்தலில், எப்படியாவது வென்றாக வேண்டும், என்பதன் காரணமாகவே பிரசாந்த் கிஷோர் நியமிக்கப்பட்டுள்ளார்.

திமுக என்பது ஏற்கனவே, காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள், தலித் மற்றும் சிறுபான்மை கட்சிகளுடன் இணைந்து ஒரு வலுவான கூட்டணியை அமைத்து, அந்த கூட்டணியும் தொடர்ந்து வருகிறது.

அதனால், முதன்மையான சமூக ஊடகங்கள் மற்றும் புதுமையான பிரச்சார நுட்பங்களில், பிரசாந்த் கவனம் செலுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகம் என்பது வித்யாசமான அரசியல் சீதோஷ்ண நிலை கொண்ட மாநிலம். நிலத்தின் புவியியல் அமைப்பையும், மக்கள் மனநிலையும் மிகவும் துல்லியமாக கணித்தால் மட்டுமே, வியூகங்களை பயன்படுத்த முடியும்.

ஸ்டாலினால் எக்காரணம் கொண்டும் முதல்வர் அரியணையில் ஏற முடியாது என்று, அதிமுகவினர் தொடர்ந்து பிரச்சாரம் செய்துகொண்டே வருகின்றனர்.

அவருடைய ஜாதகத்திலேயே முதல்வர் ஆகும் அமைப்பு இல்லை என்று ஜோதிடர்கள் சொல்வதாகவும் கூட சிலர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

இதை எல்லாம் கவனத்தில் கொண்டே மிகவும் கவனமாக, தேர்தல் வியூகங்களை வகுத்து அதை நடைமுறைப்படுத்த வேண்டிய நிலை வரும்.

இல்லையெனில், மிசா கைது, பஞ்சமி விவகாரம் போன்ற எதிர் கட்சிகள் கிளப்பும் சர்ச்சைகளுக்கே, பதில் சொல்ல நேரம் சரியாக இருக்கும் என்றும், இங்குள்ள சிலர் பிரசாந்த் கிஷோரிடம் கூறியிருப்பதாக தகவல்.

எதை செய்தாவது, திமுக தலைவர் ஸ்டாலின் அடுத்த சட்டமன்ற தேர்தலில், முதல்வர் பதவியில் அமரவேண்டும். இல்லை என்றால், பிரசாந்த் கிஷோரின் கார்பரேட் ஸ்டைல் அரசியல் வியூகங்கள் பலனில்லாமல் போய்விடும்.