எடப்பாடியின் சகோதரர் விஸ்வநாதன்  – பி.டி.அரசகுமார் திமுகவில் இணைந்தனர்!

முதல்வர் எடப்பாடியின் ஒன்று விட்ட சகோதரர் விஸ்வநாதன் திமுகவில் இணைந்த சம்பவம் அதிமுகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதேபோல், திருமண விழா ஒன்றில் ஸ்டாலினை புகழ்ந்து பேசிய பாஜக துணை தலைவர் பி.டி.அரசகுமாரும் திமுகவில் இணைந்துள்ளார்.

முதல்வர் எடப்பாடியின் பெரியம்மா மகன் விஸ்வநாதன். நெடுங்குளம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவரான இவர், எடப்பாடியின் மீதுள்ள தனிப்பட்ட அதிருப்தி காரணமாக திமுகவில் இணைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தது தமக்கு மகிழ்ச்சி என்றும், இனி தம்மால் திமுகவில் சுதந்திரமாக செயல்பட முடியும் என்றும் விஸ்வநாதன் கூறி இருக்கிறார்.

அதேபோல், புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு இல்ல திருமண விழாவில், திமுக தலைவர் ஸ்டாலினை புகழ்ந்து பேசினார் பாஜக துணை தலைவர் அரசகுமார்.

இதனால், பாஜகவினர் அவருக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அக்கட்சியை சேர்ந்த சிலர் வலியுறுத்தினர்.

இந்நிலையில், அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலினை இன்று சந்தித்த அரசகுமார், திமுகவில் தம்மை இணைத்துக் கொண்டார்.

தன்னுடைய தாய் வீட்டிற்கு வந்துள்ளதாக குறிப்பிட்ட அரசகுமார், இனியும் பொறுத்திருக்க வேண்டாம். நீங்கள் திமுகவில் இணையும் நேரம் நெருங்கி விட்டது என்று கூறினார்.

மேலும், ஸ்டாலின் தலைமையில், திமுகவின் நல்லாட்சி அமைய, இன்று முதல் என்னுடைய பயணம் தொடரும் என்றும் கூறினார்.

தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். சுயமரியாதையை இழக்க நான்  தயாராக  இல்லை,  அது பாஜகவில் எனக்கு ஏற்பட்டது. என்றும் அரசகுமார் தெரிவித்தார்