டிசம்பர் 7-ம் தேதி தர்பார் படத்தின்  இசை வெளியீட்டு விழா: பொங்கலுக்கு முன் ரிலீஸ் செய்ய திட்டம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்,  நயன்தாரா,  யோகிபாபு உள்ளிட்டோர் நடித்திருக்கும் திரைப்படம் தர்பார்.

ரஜினிகாந்தின் 167-வது படமாக உருவாகும் இந்தப் படத்தில், ஆதித்யா அருணாசலம் என்ற கதாபாத்திரத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் ரஜினி.

அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இவர்களுடன் யோகி பாபு, பாலிவுட் நடிகர் பிரதீக் பப்பர் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.

லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த நவம்பர் 7-ம் தேதி ‘சும்மா கிழி’ என்ற முதல் சிங்கிள் ட்ராக் பாடல் வெளியாகி சாதனை படைத்தது.

இந்நிலையில், தர்பார் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா டிசம்பர் 7ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டரங்கில், மாலை 5 மணிக்கு தர்பார் இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தர்பார்’ படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிடப்பட்டது. இதனிடையே, இந்தப் படத்தை ஜனவரி 9-ம் தேதி வெளியிடலாம் என்று தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஜனவரி 9-ம் தேதியே வெளியிட்டால் 2 வாரங்கள் வசூலை அள்ளிவிடலாம் என்ற முனைப்பில் களமிறங்கியுள்ளனர்.

தற்போது, இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதற்காக பல்வேறு முன்னணி விநியோகஸ்தர்கள் போட்டியிட்டனர்.

அதில் வேல்ஸ் நிறுவனம் முன்னணியில் இருக்கிறது. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாகி முறையாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.