கண்ணீரை வரவழைக்கும் வெங்காய விலை: பெரிய வெங்காயம் ரூ.140 – சின்ன வெங்காயம் ரூ. 200 ஐ தொடும் நிலை!

வெங்காயத்தை உரித்தால்தான் கண்ணீர் வரும். ஆனால் வெங்காயத்தின் விலையை கேட்டாலே கண்ணீர் வரும் என்ற நிலையில்தான், சந்தையில் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயத்தின் விலை உள்ளது.

இந்திய வெங்காய சந்தை வரலாற்றில், முன் எப்போதும் இல்லாத வகையில் பெரிய வெங்காயம் விலை கிலோ 140 ரூபாயை தொட்டுள்ளது.

சின்ன வெங்காயம் கிலோ 150 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதன் விலை விரைவில் 200 ரூபாயை தொட வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

கடந்த 2 மாதமாக பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் விலை போட்டிப் போட்டுக் கொண்டு  உயர்ந்து வருகிறது.

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, அறுவடைக்குத் தயாராக இருந்த சின்ன வெங்காயம் செடிகளிலே அழுகி வருகின்றன.

அதனால், சின்ன வெங்காயம் விலை நேற்று கிலோ ரூ.150-ஐ தொட்டது. பெரிய வெங்காயம் கிலோ 140 ரூபாய்க்கு விற்றது.

பொதுவாக மழைக்காலங்களில் வெங்காயம் விலை உயர்வது வழக்கம். ஆனால், இதற்கு முன் வெங்காயத்தின் விலை இந்த அளவுக்கு தொடர்ந்து உயர்ந்ததில்லை.

தற்போது மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் சின்ன வெங்காயம், அறுவடைக்குத் தயாராகி வந்தது. கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அழுகி, வெங்காய அறுவடை பாதிக்கப்பட்டது. இதனால், வெங்காய விவசாயிகள் கடுமையாக நஷ்டம் அடைந்துள்ளனர்.

மழை தொடருவதால் உள்ளூர் சந்தைகளில் பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் வரத்தும் பெரும் சரிவை சந்தித்துள்ளன. எனவே, வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

முதற்கட்டமாக சமீபத்தில் எகிப்து நாட்டில் இருந்து 6 ஆயிரத்து 90 டன் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனாலும், உயர்ந்த பெரிய வெங்காயம் விலை தற்போது வரை குறையவில்லை.

தற்போது துருக்கியில் இருந்து 11 ஆயிரம் டன் பெரிய வெங்காயம் இறக்குமதி செய்யப்படுகிறது.

அதன்பிறகு ஒரளவு பெரிய வெங்காயம் விலை குறையும் என்றும், அதை வைத்து சின்ன வெங்காயம் தட்டுப்பாட்டை ஒரளவு சமாளிக்கலாம் என்று வெங்காய வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.