போலீசாரால் தேடப்படும் நித்யானந்தா! தனி நாடு – தனி ராஜாங்கம் நடத்துவதாக அறிவிப்பு!

குஜராத் மாநில ஆசிரமத்தில் சட்டவிரோதமாக இளம்பெண்களை அடைத்து வைத்து குற்றச்சாட்டின் அடிப்படையில், நித்யானந்தாவை அம்மாநில போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஆனால், ரகசியமாக வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா, தனியாக ஒரு தீவை விலைக்கு வாங்கி, அதை தனி நாடாக அறிவித்து, அதற்கான  சட்டதிட்டங்களையும், கொள்கைகளையும் வீடியோக்கள் மூலம் வெளியிட்டு வருகிறார்.

இது தமிழகம் மட்டுமன்றி, நாடு முழுவதும் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கள் மகள்கள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதாக கர்நாடகாவை சேர்ந்த தம்பதியர் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து,  வழக்குப்பதிவு செய்த  போலீஸார், ஆசிரமத்தில் சோதனை நடத்தி, அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறுமிகளை மீட்கப்பட்டனர். ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் போலீஸார் கைது செய்தனர். ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.

இதில், நித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் போலீசார் தம்மை கைது செய்தால் தப்பிக்க முடியாது என்று நினைத்த நித்யானந்தா, ரகசியமாக வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டார்.

வெளிநாட்டுக்கு தப்பிச் சென்ற நித்யானந்தா, மத்திய ஈக்வடாரில் தீவு ஒன்றை விலைக்கு வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டுள்ளார்.

அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம்பெற்றுள்ள சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:-

கைலாசத்தில் பின்பற்றப்படும் அதிகாரப்பூர்வ மொழிகள் ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ்.   10 கோடி  ஆதி சைவர்களின் மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 200 கோடி  இந்துக்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தெற்காசியாவில் 56 அசல் வேத நாடுகளையும், உலகளாவிய இந்து புலம்பெயர்ந்தோரையும் கொண்டுள்ளது. கைலாசா பாஸ்போர்ட்டை வைத்திருப்பவர் பதினொரு பரிமாணங்களிலும், கைலாசா உட்பட பதினான்கு  உலகங்களிலும் இலவசமாக  அனுமதிக்கப்படுவார்கள்.

சுகாதாரத்துறை, மாநிலத் துறை, தொழில்நுட்பத் துறை, அறிவொளி பெற்ற நாகரீகத் துறை, கல்வித் துறை, மனித சேவைகள் துறை, வீட்டுவசதித் துறை, வர்த்தகத் துறை, கருவூலத் துறை என 10  துறைகள் உள்ளன.

ஒவ்வொரு  நாட்டை போலவே  ஒரு பல்கலைக்கழகம் உள்ளது.  சொந்த தொலைக்காட்சி சேனல் மற்றும் பத்திரிக்கை உள்ளது.

கைலாசா நாட்டில்  உலகளாவிய இலவச சுகாதாரம், இலவச கல்வி, இலவச உணவு மற்றும் கோயில் சார்ந்த வாழ்க்கை முறையின் மறுமலர்ச்சி ஆகியவற்றைக் கொடுக்கிறது.

கைலாசாவின் கொடி நந்தியுடன் நித்தியானந்தா. தேசிய விலங்கு நந்தி. தேசிய பறவை நாகம் – தங்க நிறமுடைய பறவை.

நாட்டின் சின்னம் பரமசிவன்,  பராசக்தி,  நித்யானந்தா மற்றும் நந்தி. தேசிய மலர் தாமரை. தேசிய மரம் ஆலமரம்.

கைலாசா ஒரு இந்து முதலீடு,  ரிசர்வ் வங்கி,  கிரிப்டோகரன்சி ஏற்றுக்கொள்ளப்படும்,. எதிர்காலத்தில் ஒரு ‘தர்ம பொருளாதாரம்’ ஏற்படுத்தப்படும். என்று கூறப்பட்டுள்ளது. இவை எல்லாம் எங்கு போய் முடியுமோ… தெரியவில்லை.