“பவுனு பவுனுதான்” பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கு குவியும் பாராட்டுக்கள்!

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமைய வேண்டும் என்று வலியுறுத்தி, முதல்வருக்கு மனு அளித்த பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கு அப்பகுதி மக்களின் பாராட்டு குவிந்து வருகிறது.

மயிலாடுதுறையை தலைநகரமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட கால கோரிக்கையாக இருந்து வருகிறது.

இதற்காக அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். அந்த போராட்டம் தற்போதும் தொடர்ந்து வருகிறது.

நாகை மாவட்டத்தில் இருக்கும் சீர்காழி, பூம்புகார், மயிலாடுதுறை ஆகிய மூன்று தொகுதிகளும், வடக்கு பக்கத்தில் தனியே பிரிந்து கிடக்கின்றன.

தலைநகர் நாகப்பட்டினத்திற்கு இப்பகுதி மக்கள் செல்லவேண்டும் என்றால், திருவாரூர் மாவட்டத்தையும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதியையும் கடந்து செல்ல வேண்டும் என்ற நிலையே உள்ளது.

இதன் காரணமாக, மயிலாடுதுறையை தலைநகரமாக கொண்டு தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

மேலும், திருவாரூரும், நாகப்பட்டினமும் அருகருகே உள்ளன. நாகை மாவட்டத்தில் உள்ள மயிலாடுதுறை பகுதி மட்டுமே தனியாக பிரிந்து இருக்கிறது.

எனவே, நாகை மாவட்டத்திற்கு வரும் மருத்துவ கல்லூரியை, மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், மாவட்ட அமைச்சரான ஒ.எஸ்.மணியன், இந்த இரண்டு கோரிக்கைகளையுமே விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

எனினும், பூம்புகார் தொகுதி எம்.எல்.ஏ வான எஸ்.பவுன்ராஜ், மயிலாடுதுறை மக்களின் கோரிக்கையை ஏற்று, முதல்வரை சந்தித்து, கோரிக்கை மனுவை அளித்துள்ளார்.

ஆனால், மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி ஆகியோர், பவுன்ராஜுடன் சேர்ந்து முதல்வரை சந்திக்கவில்லை. பவுன்ராஜ் மட்டுமே முதல்வரை சந்தித்து மனு அளித்துள்ளார்.

இதன், காரணமாக, தனியாக நின்று, மக்களின் கோரிக்கையை மனுவாக முதல்வரிடம் அளித்த பூம்புகார் எம்.எல்.ஏ பவுன்ராஜுக்கு அப்பகுதி மக்கள்  பாராட்டும் நன்றியும் தெரிவித்துள்ளனர்.

நன்றியை வெளிப்படுத்தும் விதமாக, பூம்புகார், மயிலாடுதுறை, சீர்காழி சட்டமன்ற தொகுதி மக்கள் சார்பில் “பவுனு பவுனுதான்” என்ற வாசகங்களுடன்  மயிலாடுதுறையில் ஆங்காங்கே போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.