அதிமுக – பாமக கூட்டணியை உடைக்கும் புதிய வியூகம்: திமுக ஆதரவு சமூக ஊடகங்களின் அசைன்மென்ட்!

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றாலும், வேலூர் தேர்தலில், வெற்றிக்கு கடுமையான போராட்டத்தை சந்தித்தது. அடுத்து நடந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில், நிலைமை தலைகீழாக மாறி அதிமுக வெற்றி பெற்றது.

விக்கிரவாண்டி தேர்தலில் 44 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அதிமுக பெற்ற வெற்றி, அதிமுகவுக்கு இன்ப அதிர்ச்சியாகவும், திமுகவுக்கு ஷாக் டிரீட்மென்ட் ஆகவும் இருந்தது.

இந்நிலையில், வடமாவட்டங்களில்,  செல்வாக்குடன் திகழும் பாமகவை அதிமுக கூட்டணியில் இருந்து அப்புறப்படுத்தினால் மட்டுமே, அடுத்த சட்டமன்ற தேர்தல் திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்பது திமுகவின் கணக்கு.

இதற்காக, திமுக ஆதரவு சமூக ஊடகங்களுக்கு இப்போதே அசைன்மென்ட் வழப்பட்டு விட்டது. அந்த சமூக ஊடகங்களும், ஊசி கூட புக முடியாத ஓட்டையில், ஒட்டகமே புகுந்து வருவதாக தொடர்ந்து எழுத ஆரம்பித்து விட்டன.

தினகரனுடன் ஏற்பட்ட மோதலால், முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசிய, பெங்களூரு புகழேந்தியை, சசிகலாவின் தூதராக சந்தித்து பேசினார் என்று ஏற்கனவே ஒரு தகவல் பரப்பப்பட்டது.

அதிமுக பொதுக்குழுவிலும், நமது அம்மா நாளேட்டிலும் அதற்கு அளிக்கப்பட பதிலை அடுத்து, அந்த விஷயம் அப்படியே அமுங்கி போனது.

தற்போது, படையாட்சியார் மணிமண்டப விழாவை ஒட்டி சில விஷயங்களை மையப்படுத்தி, அதிமுக – பாமக இடையே கூட்டணியில் இடைவெளி என்று சில தகவல்களை, திமுக ஆதரவு சமூக ஊடகங்கள் சில பரப்பி வருகின்றன.

தமது கட்சிக்கென்று தகவல் தொழில்நுட்ப அணி தனியே இயங்கினாலும், மக்கள் மத்தியில் செல்வாக்குடன் விளங்கும், சில சமூக ஊடகங்களையும், தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் அனுபவம் திமுகவுக்கு உண்டு.

ஆனால், தமக்கு ஆதரவான சமூக ஊடகங்கள் சில இருந்தாலும், அதை கொஞ்சம் கூட பொருட்படுத்தாத வகையிலேயே பாமகவின் செயல்பாடுகள் இருக்கும்.

பாமகவின் இந்த பலவீனம்தான், பாமகவுக்கு எதிரான செய்திகள் மக்கள் மத்தியில், வெகுவாக பரவுவதற்கு காரணமாக இருப்பதாக அக்கட்சியை சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.

வன்னிய சமூகத்தின் செல்வாக்கு பெற்ற படையாட்சியார், காங்கிரஸ் கட்சியில் கட்சியை இணைத்த காரணத்தினால்தான், சமூகத்தின் வளர்ச்சி பாதிக்கப்பட்டதாக கூறி, தமது தலைமையிலான இயக்கத்தை வளர்த்தார் டாக்டர் ராமதாஸ்.

அதனால், படையாட்சியார் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில், அவர் எதிலும் கலந்து கொள்ளாமலே புறக்கணித்து வந்தார். அதன் காரணமாகவே, படையாட்சியார் மணிமண்டபம் திறப்பு விழாவிலும், அவர் கலந்து கொள்ளவில்லை.

இதை ஒரு காரணமாக மையப்படுத்தி, அதிமுக – பாமக உறவில் விரிசல் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.

உண்மையில், களநிலவரத்தை ஆராய்ந்தால், தஞ்சை மாவட்டம் பாபநாசம் தொடங்கி, டெல்டா மாவட்டங்கள், மேற்கு மாவட்டங்கள், வடமாவட்டங்கள் வரை சுமார்  120 தொகுதிகளில் வன்னியர்கள் வசிக்கின்றனர்.

இந்த அனைத்து தொகுதிகளிலும் பாமகவுக்கு வாக்கு வங்கி இருந்தாலும், 40 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாமகவுக்கு வலுவான வாக்கு வங்கி உள்ளது.

முதல்வர் போட்டியிட்டு வென்ற எடப்பாடி தொகுதியே பாமகவின் கோட்டையாக விளங்கியதுதான். இது, முதல்வருக்கும் தெரியும், பாமகவுக்கும் தெரியும்.

எனவே, அடுத்த சட்டமன்ற தேர்தலில், வெற்றி பெற, பாமகவின் பங்கு இன்றியமையாதது என்று முதல்வருக்கு தெரியும். அதேபோல், சட்டமன்றத்தில் கண்டிப்பாக தங்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதில் பாமகவும் கவனமாக உள்ளது.

அதனால், அதிமுக கூட்டணியை விட்டு பாமகவை அப்புறப்படுத்தினால், அந்த கூட்டணி பலவீனப்பட்டு விடும். திமுக வெற்றியை சுவைப்பது எளிது, என்ற கணக்கில், எதிர் தரப்பில் இப்போதே, பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

இதை, சில திமுக ஆதரவு சமூக ஊடகங்களும், நடுநிலை நிலைப்பாட்டுக்கு மத்தியில், முடிந்தவரை கொளுத்தி போடுவோம்.. எரிந்தால் எரியட்டும், இல்லை என்றால் மற்றொன்றை கொளுத்தி போடுவோம் என்று செயல்படுத்தி வருகின்றன.

இதற்கு அதிமுக மற்றும் பாமக தரப்பில் இருந்து, எந்த மாதிரியான எதிர் வினைகள் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.