விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்கள் கண்டுபிடிப்பு: நாசாவுக்கு உதவிய தமிழக இன்ஜினியர்!

விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க, தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உதவியுள்ளார்.

நிலவின் தென் துருவத்தை ஆராய, இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான  இஸ்ரோ, சந்திரயான்-2 என்ற  விண்கலத்தை கடந்த ஜூலை 22-ம்தேதி விண்ணில் செலுத்தியது.

கடந்த செப்டம்பர் மாதம் 7-ம் தேதி திட்டமிட்டபடி லேண்டர் நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கிக் கொண்டிருந்தபோது, கடைசி நிமிடத்தில் பாதை மாறி வேகமாக சென்று விழுந்தது.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வேகமாகச் சென்று நிலவின் தரையில் லேண்டர் மோதியதாகக் கூறப்படுகிறது.

இந்தநிலையில், விக்ரம் லேண்டரின் மோதிய பகுதி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாசாவின் ஆர்பிட்டர் கேமிரா, விக்ரம் லேண்டர் நிலவில் இறங்க முயற்சித்தற்கு முன்பும், நிலவில் மோதிய பின்பும் தரை பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்துள்ளது.

விக்ரம் லேண்டர் மோதி உடைந்த பாகங்களை கண்டுபிடிக்க தமிழகத்தைச் சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் உதவியுள்ள விவரம் தற்போது வெளியாகியுள்ளது.

தொழில்நுட்பத்துறை இன்ஜினியராக சென்னையில் பணியாற்றி வரும் சண்முக சுப்பிரமணியன், கடந்த அக்டோபர் மாதம் ஆய்வு செய்து இந்தப் பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

அதன் பின்னர் நாசாவின் நிலவை ஆய்வு செய்யும் டீம் குறிப்பிட்ட அந்தப் பகுதியில் கூடுதல் ஆய்வு நடத்தி தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சண்முக சுப்பிரமணியன் கொடுத்த தகவலின் அடிப்படையில், நாசா வெளியிட்டுள்ள புகைப்படத்தில் விக்ரம் லேண்டரின் பாகங்கள் விழுந்த இடங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

இதற்காக சண்முக சுப்பிரமணியனுக்கு நாசா சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ‘விக்ரம் லேண்டரின் உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க உதவியதற்கு நன்றி என்று கூறப்பட்டுள்ளது.