உள்ளாட்சி மன்ற மறைமுக தேர்தலுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு : விசாரணை 17ம் தேதிக்கு ஒத்திவைப்பு!

மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தொடரப்பட்ட வழக்கின் விசாரணையை, உயர்நீதிமன்றம் வரும் 17ஆம் தேதி ஒத்தி வைத்துள்ளது.

தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களை மறைமுகமாக தேர்வு செய்யும் வகையில் , வகையில் நவம்பர் 19ம் தேதி, தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்தது.

இதை எதிர்த்து, சென்னை தாம்பரத்தை சேர்ந்த யேசுமணி என்பவர் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், ஆர்.ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் நேரடி தேர்தல் மூலம் தேர்வு செய்யப்பட்டு வந்த நிலையில், இப்போது மறைமுக தேர்தல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

அரசின் இந்த நடைமுறை உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது என்பதால், அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

அப்போது, இதற்கு முன்பும் மறைமுக தேர்தல் முலமாக தலைவர் பதவிகள் நிரப்பப்பட்டதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், மறைமுக தேர்தல் ஊழல் நடவடிக்கைகளுக்கு வழி வகுக்கும் எனக் கூறுவதை ஏற்க முடியாது என்றனர்.

மேலும்,  இந்த வழக்கு மனுவில்,  சட்டப்பூர்வமான காரணங்கள் ஏதும் கூறப்படாததால்,மனுதாரர்  கூடுதல் மனுத்தாக்கல் செய்ய அறிவுறுத்தி, விசாரணையை டிசம்பர் 17ஆம் தேதி நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.