வரும் ஜூன் மாதம் முதல் ‘ஒரே தேசம் ஒரே ரேஷன் கார்டு’ திட்டம் அமல்: ராம் விலாஸ் பாஸ்வான் அறிவிப்பு!

2020-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி முதல்  ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று மத்திய உணவு துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் அறிவித்துள்ளார்.

இந்தத் திட்டம், சொந்த மாநிலத்தை விட்டு இடம் பெயர்ந்து வேலை பார்க்கும் தொழிலாளர்கள், தினக்கூலிகள் ஆகியோருக்கு உதவும் என்று அவர் கூறியுள்ளார்.

ஒரே தேசம், ஒரே ரேஷன் கார்டு திட்டம் மூலம் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தகுதியான பயனாளிகள் நாட்டில் உள்ள எந்த நியாய விலைக் கடையிலும் தங்களுக்கு உரிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளித்த, மத்திய நுகர்வோர், உணவு மற்றும் பொது வழங்கல் துறை அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வான் இதை தெரிவித்தார்.

பயனாளிகளை அடையாளம் காண, ஒவ்வொரு கடையிலும் ஆதார் மூலம் அடையாள அட்டையும், பயோமெட்ரிக் முறையும் பயன்படுத்தப்படும். இதற்காக அனைத்துக் கடைகளும் ஆன்லைன் மூலம் இணைக்கப்படும்.

இந்தத் திட்டத்தை வெற்றிகரமாகக் கொண்டு செல்வதற்குத் தேவையான செயல்திட்டத்தை உருவாக்க இந்தியத் தர நிர்ணய நிறுவனத்திடம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.