மயிலாடுதுறை மாவட்டம்: ஒத்துழைக்க மறுக்கிறாரா ஒ.எஸ்.மணியன்?

தமிழகத்தின் அனைத்து துறைகளிலும், ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. குறிப்பாக அரசியலிலும்  சினிமாவிலும் இந்த முக்கியத்துவம் சற்று அதிகம்.

நிர்வாக வசதிக்காக தஞ்சை மாவட்டத்தில் இருந்து நாகை, திருவாரூர் என்று மேலும் இரு மாவட்டங்கள் ஏற்கனவே உருவாக்கப்பட்டன.

இதில், நாகை மாவட்டத்தின் மயிலாடுதுறை, சீர்காழி, பூம்புகார் ஆகிய சட்டமன்ற தொகுதிகள் ஒரு பக்கமாக ஒதுங்கி கிடக்கின்றன.

இதனால், இப்பகுதி மக்கள் தலைநகரான நாகப்பட்டினத்திற்கு செல்ல, திருவாரூர் மாவட்டத்தையும், புதுச்சேரியின் காரைக்கால் பகுதியை கடந்து பயணிக்க வேண்டிய நிர்பந்தம் உள்ளது.

ஒரு மாவட்டத்தில் வசிக்கும் மக்கள், தங்கள் தலைநகரை அடைய, மற்றொரு மாவட்டத்தையும், ஒரு யூனியன் பிரதேசத்தையும் கடந்து செல்கிறார்கள் என்றால், அது மயிலாடுதுறை பகுதி மக்களாகத்தான் இருக்கும்.

ஆனால், நாகப்பட்டினம், கீழ்வேளூர், வேதாராண்யம் ஆகிய சட்டமன்ற தொகுதிகள், தலைநகரை ஒட்டி அமைந்துள்ளன. அதனால், இந்தபகுதி மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை.

மேலும் ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டத்தில் தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மூன்று மக்களவை தொகுதிகள் இருந்தன. மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பின்னரும் தொகுதிகளில் மாற்றம் இல்லை.

இந்நிலையில், தலைநகருக்கான அனைத்து தகுதிகளும் நிறைந்த மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு, புதிய மாவட்டம் அமைக்க வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் இன்றும் பல்வேறு போராட்டங்களையும், பிரச்சாரங்களையும் தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், மயிலாடுதுறை மக்களவை உறுப்பினராக இருந்து, தற்போது வேதாரண்யம் சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ள, அமைச்சர் ஒ.எஸ்.மணியனிடமும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஆனால், மணியன் இந்த பிரச்சினையில் பெரிய அளவில் ஆர்வம் காட்டியதாக தெரியவில்லை.

இந்நிலையில், பூம்புகார் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ பவுன்ராஜ், இக்கோரிக்கையை வலியுறுத்தி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, மனுகொடுக்க, மயிலாடுதுறை எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன், சீர்காழி எம்.எல்.ஏ பாரதி ஆகியோரை அழைத்துள்ளார்.

பவுன்ராஜின் முயற்சிக்கு ஆரம்பத்தில் சம்மதம் தெரிவித்த மயிலாடுதுறை மற்றும் சீர்காழி எம்.எல்.ஏக்கள், கடைசியில் முதல்வரை சந்திக்க வரவில்லை. இத்தனைக்கும் அந்த இரு எம்.எல்.ஏ க்களும் அதிமுகவை சேர்ந்தவர்களே.

இதனால், பவுன்ராஜ் மட்டும் தனியாக முதல்வரை சந்தித்து மனுகொடுத்து விட்டு வந்துள்ளார் என்று பத்திரிக்கை ஒன்றில் செய்தி வெளியாகி உள்ளது.

மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாவதை அமைச்சர் ஒ.எஸ்.மணியன் விரும்பவில்லை என்று சொல்லப்படுகிறது.

நாகை மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும், மயிலாடுதுறை தனியாக பிரிந்தால், தன்னுடைய அரசியல் செல்வாக்கின் எல்லையும் குறுகிவிடும் என்று அவர் நினைப்பதாகவும் சிலர் கூறுகின்றனர்.

எனினும், மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட மாவட்டம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து, அப்பகுதி மக்கள் கொஞ்சமும் பின்வாங்கவில்லை.

இதில் முதல்வர் பழனிசாமியின் முடிவு என்னவாக இருக்கும்? என்பதே மயிலாடுதுறை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.