மகாராஷ்டிராவில் எடுபடாத தேர்தல் வியூகம்: சிவசேனாவால் விரட்டப்பட்ட பிரசாந்த் கிஷோர்!

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில், பிரசாந்த் கிஷோர் வகுத்துக் கொடுத்த தேர்தல் வியூகம் எடுபடாமல் போனதால், சிவசேனா கட்சியால், அவர் விரட்டியடிக்கப்பட்டார் என்று தகவல்கள் கூறுகின்றன.

மகாராஷ்டிராவில் நடந்த சட்டமன்ற தேர்தலில், சிவசேனா கட்சி பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. இக்கட்சிக்கு தேர்தல் வியூகங்கள் அனைத்தையும் வகுத்துக் கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்.

மொத்தம் 124 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா, 115  இடங்களில் வெற்றி  பெறும் என்றும், அதற்கான வியூகங்கள் அனைத்தையும் வகுத்துக் கொடுத்துள்ளார் பிரசாந்த் கிஷோர்.

அவர் வகுத்து கொடுத்த வியூகங்களின் அடிப்படையிலேயே, சிவசேனா தனது தேர்தல் பிரச்சாரங்களையும், இதர நடவடிக்கைகளையும் மேற்கொண்டது.

ஆனால், தேர்தல் முடிவில் சிவசேனாவுக்கு வெறும் 56 இடங்கள் மட்டுமே கிடைத்தன. இது, கடந்த தேர்தலில் சிவசேனா பெற்ற இடங்களை விட 7 இடங்கள் குறைவாகும்.

இதனால், அதிர்ச்சி அடைந்த சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, கட்சியின் மூத்த தலைவர்கள் சிலருடன் ஆலோசனை நடத்தி உள்ளார்.

அப்போது, சிவசேனாவின் தேர்தல் ஆலோசகராக பிரசாந்த் கிஷோரை நியமித்ததுதான் தவறு. அவரது வியூகம் சமீபகாலமாக எந்த மாநிலத்திலும் எடுபடவில்லை என்று கூறியுள்ளனர்.

மேலும், அவர் கொடுத்த ஆலோசனைகள், வகுத்த வியூகங்கள் அனைத்துமே, தேர்தல் களத்தில் நமக்கு எதிராக மாறிவிட்டன. மாநிலத்தின் கள நிலவரம் அவருக்கு முழுமையாக பிடிபடவில்லை என்றும் கூறியுள்ளனர்.

அத்துடன் கிஷோரின் ஆலோசனைகளை கேட்காமல் இருந்திருந்தால், 90 இடங்களுக்கு மேல் வெற்றிபெற்று இருக்கலாம் என்றும் மூத்த தலைவர்கள் கூறி இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து கிஷோரை தொடர்புகொண்டு பேசிய உத்தவ் தாக்கரே, அவரிடம் கடுமையாக பேசி இருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. மேலும், பதவி ஏற்பு விழாவுக்கு கூட, தாக்கரே அவரை அழைக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

இனி, மகராஷ்டிராவில் தமக்கு மரியாதை இருக்காது என்று நினைத்த கிஷோர், தமிழகத்தின் பக்கம் திரும்பி இருப்பதாக கூறப்படுகிறது.