அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு இப்போதே வியூகம் வகுக்கும் திமுக: பிரசாந்த் கிஷோருடன் முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் நிலவி வரும் மழை வெள்ள பாதிப்புகள், உள்ளாட்சி தேர்தல் சர்ச்சைகள் ஒரு பக்கம் இருந்தாலும், அடுத்து வரும் சட்டமன்ற தேர்தலை நோக்கி இப்போதே, தமது வியூகத்தை தொடங்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது திமுக.

கூவத்தூர் பிரச்சினைகள் களைகட்டியபோதே, திமுக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்புகள் அதிகம் இருந்தன. ஆனால், மக்கள் தீர்ப்புடன்தான் ஆட்சி அமைய வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார் ஸ்டாலின்.

அதனால், அந்த சந்தர்ப்பத்தை அவர் தவிர்த்து விட்டார். அதன் பிறகு, மக்களவை தேர்தலுடன் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில், கூடுதல் இடங்களை திமுக பிடித்தது.

அந்த சந்தர்ப்பத்திலும், சில எம்.எல்.ஏ க்களை வளைத்து, திமுக ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை என்றும் ஸ்டாலின் முடிவெடுத்தார்.

தற்போதைய நிலையில், உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டாலும், அதில் வார்டு மறு வரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட சில பிரச்சனைகளை முன்வைத்து, திமுக நீதிமன்றத்தை நாடும் என்றே சொல்லப்படுகிறது.

அதனால், உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறுமா? என்பதில் ஒரு சந்தேகம் உள்ளது. தற்போதைய சூழலில், அதிமுகவும், உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் இருப்பதே நல்லது என்றே நினைக்கிறது.

எனவே, அதிமுக, திமுக என இரு கட்சிகளுக்கும், அடுத்து வரப்போகும் சட்டமன்ற பொது தேர்தலே இலக்காக உள்ளது. அதை முன்வைத்தே இரு கட்சிகளும் தங்களது நடவடிக்கைகளை தொடர்ந்து வருகின்றன.

இந்நிலையில், தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், நேற்று திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து, அடுத்த சட்டமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தற்போதைய சூழலில் சட்டமன்ற தேர்தல் நடந்தால், திமுகவுக்கு அது சாதகமாக இருக்கும் என்று, பிரசாந்த் கிஷோர் அண்மையில் எடுத்த ஆய்வு முடிவுகளில் தெரிய வந்துள்ளது.

இதன் அடிப்படையிலேயே, பிரசாந்த் கிஷோரை, திமுகவின் தேர்தல் வியூக ஆலோசகராக நியமிக்கலாம் என்று திமுக கருதியது. இந்நிலையில், நேற்று ஸ்டாலினை சந்தித்து, பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியதாக சொல்லப்படுகிறது.

முதல் கட்ட ஆலோசனையில், ஒரு சில விஷயங்கள் பற்றி மட்டுமே பெசப்பட்டுள்ளதகவும், அடுததடுத்த அமர்வுகளில், விரிவான ஆலோசனைகள் நடைபெறும் என்று சொல்லப்படுகிறது,

பிரசாந்த் கிஷோர், திமுகவுக்கு என்னென்ன தேர்தல் வியூகங்களை வகுத்து கொடுக்கிறார், அது தமிழ் நாட்டில் எந்த அளவு சாத்தியம் ஆகப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.