பாமக – அதிமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினரை வளைக்கும் பாஜக: உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியா?

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. கடந்த மக்களவை தேர்தல் முதல் இன்று வரை இந்த கூட்டணி தொடர்ந்து வருகிறது.

அதே சமயம் மறுபக்கம், அதிமுக, பாமக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளை சேர்ந்த பலரை, பாஜக தொடர்ந்து தங்கள் பக்கம் வளைத்து வரும் நிகழ்வுகளும் அரங்கேறி வருகின்றன.

அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களாக வலம் வந்த நடிகர் ராதாரவி, நடிகை நமிதா ஆகியோர், பாஜக தேசிய செயல் தலைவர் நட்டா முன்னிலையில், சனிக்கிழமை தங்களை அக்கட்சியில் இணைத்துக் கொண்டனர்.

இந்நிலையில், மற்றொரு கூட்டணி கட்சியான பாமகவை சேர்ந்த தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வினோத்குமார், மத்திய மாவட்ட தலைவர் ஜெபக்குமார் ஆகியோர் பாஜக மாநில செயலாளர் ஆர்,சீனிவாசன் தலைமையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளனர்.

அவர்களுடன், ஓட்டப்பிடாரம், விளாத்திகுளம், எட்டயபுரம், கயத்தார் ஒன்றிய, நகர தலைவர்கள், கிளைத்தலைவர்கள் உள்ளிட்ட பாமகவை சேர்ந்த 300 பேர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, அதிமுகவை சேர்ந்த நட்சத்திர பேச்சாளர்களையும், பாமக நிர்வாகிகளையும் வளைத்து தங்கள் கட்சியில் இணைத்திருப்பது, அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

ராதாரவி, நமிதா போன்றவர்கள் வேறு கட்சிக்கு செல்வதால், அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. அதேபோல், தென் மாவட்டத்தை சேர்ந்த பாமக நிர்வாகிகள் மற்றொரு கட்சியில் சேருவதால், பாமகவுக்கும் இழப்பு இல்லை.

எனினும், ஒரு கூட்டணியில் இருந்து கொண்டு, அந்த கூட்டணியில் உள்ள கட்சியினரை தங்கள் கட்சியில் சேர்த்து கொள்வதை கூட்டணி தர்மமாக எடுத்துக்கொள்ள முடியாது.

இதனால், வரும் உள்ளாட்சி தேர்தலில், அதிமுக கூட்டணியில் இருந்து விலகி, பாஜக தனித்து போட்டியிட போகிறதா? என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.