ஸ்டாலினை பாராட்டியதற்கு பாஜக எதிர்ப்பு: பின்வாங்கிய  பி.டி.அரசகுமார் விளக்கம்!

புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு மகளின் திருமணம், திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.

விழாவில் பங்கேற்று பேசிய, பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசகுமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை வெகுவாக புகழ்ந்து பேசினார்.

எம். ஜி.ஆருக்கு அடுத்தபடியாக நான் ரசிக்கும் தலைவர் ஸ்டாலின் மட்டுமே. முதல்வர் இருக்கையை தட்டிப்பறிக்க நினைத்திருந்தால் ஸ்டாலின், கூவத்தூர் பிரச்சினையின்போதே முதல்வர் ஆகியிருப்பார்.

ஜனநாயக முறையில் அவர் முதல்வர் ஆக விரும்புகிறார். காலம் கனியும், காரியங்கள் தானாக நடக்கும். ஸ்டாலின் நிச்சயம் அரியணை ஏறுவார். நாம் அதை யெல்லாம் பார்க்க போகிறோம் என்று அரசகுமார் குறிப்பிட்டார்.

இதற்கு தமிழக பாஜகவினர் மத்தியில் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், தமது முகநூல் பக்கத்தில், அரசகுமாரின் பேச்சுக்கு கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார்.

அதில், திமுக திருமண விழாவில், அரசகுமார் திமுக காரனாகவே மாறி பேசியது கண்டிக்கத்தக்கது. அரசகுமாரின் பேச்சை எந்த ஒரு பாஜக தொண்டனும் ஏற்க மாட்டான் என்று கூறி இருந்தார்.

மேலும், மாநில தலைமை அவரிடம் விளக்கம் கேட்டு ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எஸ்.ஆர்.சேகர் வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அரசகுமார்,  திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து தான் கூறிய கருத்து திரித்துக்கூறப்பட்டுள்ளது என்றார்.

மேலும், அது எனது சொந்த கருத்தேயன்றி, பாரதிய ஜனதா கட்சியின் கருத்து அல்ல. ஸ்டாலின் குறித்து தான் கூறியது தொண்டர்களை காயப்படுத்தி இருந்தால் வருந்துகிறேன் என்றும் கூறினார்.

பஞ்சமி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில், திமுக தலைவர் ஸ்டாலினை, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தேசிய செயலாளர் ஹெச். ராஜா ஆகியோர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பா.ஜ.க. நிர்வாகியான அரசகுமார், திமுக தலைவர் ஸ்டாலினை பாராட்டி பேசி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.