கனமழை பெய்யும் தமிழகத்திற்கு “ரெட் – ஆரஞ்சு அலர்ட்” : பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை- தேர்வுகள் ஒத்திவைப்பு!

அதிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால், இந்திய வானிலை ஆய்வு மையம், தமிழகத்திற்கு  “ரெட் மற்றும் ஆரஞ்சு அலெர்ட்”  விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இது வரை இல்லாத வகையில், இந்த ஆண்டு பருவமழை தொடர்ந்து நீடித்து வருகிறது.

சென்னை, காஞ்சீபுரம்,  திருவள்ளூர், வேலூர்,  விருதுநகர்,  திருநெல்வேலி, கன்னியாகுமரி,தென்காசி, ராமநாதபுரம்,கடலூர் உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

இந்நிலையில்,  தமிழகத்தில் மேலும் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதில், தமிழகத்திற்கு ஞாயிற்றுகிழமை ‘ரெட் அலர்ட்’ என்றும் திங்கள் கிழமை ‘ஆரஞ்சு அலர்ட்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நிர்வாக ரீதியாக அதிகாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் இந்த ரெட் அலர்ட் என்பது தமிழகம் முழுவதும் பொருந்ததாது. இது ஒரு சில மாவட்டங்களில், குறிப்பிட்ட இடங்களில் அதிக கனமழை பெய்யும் என்பதற்காக கூறப்பட்டுள்ளது.

சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளிக் காற்றுவீசும் என்பதால் குமரி, லட்சத்தீவு கடல் பகுதிக்கு 2 நாட்களுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன மழை காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், ராமநாதபுரம்  மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியிலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மழை காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்மழை காரணமாக நாளை நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு நாளை நடைபெற இருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.