ஸ்டாலின் முதல்வராவார்:   பாஜக துணைத்தலைவர் பேச்சு!

அதிமுக – பாஜக கூட்டணியில் இருக்கும் நிலையில், அதிமுகவின் பிரச்சார பீரங்கிகளாக இருந்த நடிகர் ராதாரவி, நடிகை நமிதா ஆகியோர், நேற்று பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில், பாஜக துணைத்தலைவர் அரசகுமார், திமுக நிர்வாகி இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு, ஸ்டாலின் விரைவில் தமிழக முதல்வர் ஆவார் என்று பேசியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட திமுக செயலாளர் பெரியண்ணன் அரசு மகள் திருமணம் இன்று நடைபெற்றது. திமுக தலைவர் ஸ்டாலின் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார்.

அந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய பாஜக துணைத்தலைவர் அரசகுமார், திமுக தலைவர் ஸ்டாலினை வெகுவாக புகழ்ந்து பேசியுள்ளார்.

எம்ஜிஆருக்கு பிறகு, நான் ரசித்த தலைவர் தளபதி ஸ்டாலின்தான் என்று குறிப்பிட்ட அவர், நாம் வாழும் காலத்தில் அவர் வாழ்வது நமக்கு கிடைத்த பெருமை என்றார்.

மேலும், முதல்வர் இருக்கையை தட்டிப் பறிக்கவேண்டும் என்று ஸ்டாலின் நினைத்திருந்தால், ஒரே இரவுக்குள், கூவத்தூர் சென்று அவர் முதல்வர் ஆகி இருப்பார்.

ஆனால், ஜனநாயக ரீதியாக, அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக அவர் காத்துக்கொண்டு இருக்கிறார்.

பொறுத்தவர் பூமி ஆள்வார் என்பது போல, நிரந்தரமாக ஆள வேண்டிய திருநாள் வரும். அதற்காக அவர் காத்துக்கொண்டு இருக்கிறார் என்று அரசகுமார் குறிப்பிட்டார்.