வேட்பாளருக்கு தரவேண்டிய ரூ. 1000 கோடியை ஏமாற்றினாரா தினகரன்?: புகழேந்தி கிளப்பும் பகீர் குற்றச்சாட்டு!

தேர்தலில் வேட்பாளர்களுக்கு அளிக்க வேண்டிய ரூ. 1000 கோடியை, தினகரன் ஏமாற்றியதாக பெங்களுரு புகழேந்தி பகீர் குற்றச்சாட்டை கிளப்பி  உள்ளார்.

அமமுக தினகரனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர் பெங்களுரு புகழேந்தி, சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் அடிக்கடி சந்திப்பது போலவே, புகழேந்தியும் அவரை அடிக்கடி சந்தித்து வந்தார்.

இந்நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் புகழேந்திக்கும், தினகரனுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. அதிலிருந்து, அவர் தினகரனை கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தார்.

மேலும், அமமுக அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து, சேலத்தில் போட்டிக் கூட்டம் நடத்தி, அதிமுகவில் தாங்கள் இணையப்போவதாகவும் அறிவித்தார்.

அத்துடன், அமமுக பதிவுக்காக பிரமாண பத்திரம் தாக்கல் செய்தவர்களில் 14 பேர், கட்சியை விட்டு விலகியதால், அமமுக பதிவு செய்யப்படுவதை தடை செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மனுத்தாக்கல் செய்தார்.

இந்நிலையில், தேவகோட்டையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தினகரன், உயர்நீதிமன்றத்தில் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளதால், அமமுகவை பதிவு செய்வதில் எள்ளளவும் பாதிப்பு ஏற்படாது என்றார்.

நீதிமன்றம்தான் அவருக்கு குட்டு வைக்கும், அவர் யாரிடமோ விலைபோய் விட்டார் என்றும் விமர்சித்தார்.

இதற்கு, சேலத்தில் பதிலளித்த புகழேந்தி, யாரிடமாவது பணம் கேட்டேன் என்று சொன்னால், நான் அரசியலை விட்டே ஒதுங்கிக் கொள்கிறேன். தினகரன் என்னை திட்டமிட்டு பழிவாங்கி உள்ளார் என்று கூறினார்.

நான் தினகரனையும், பழனியப்பனையும் பார்த்து கேட்கிறேன், மக்களவை தேர்தலில், சேலத்தில் மட்டும் 200 கோடி ரூபாய் வரை கைமாறியுள்ளது. ஒரே இடத்திற்கு 100 கோடி ரூபாய் சென்றுள்ளது.

மக்களவை தேர்தலில் மொத்தமாக  1000 கோடி ரூபாய் வரை யாரிடமோ பெற்று வந்து, அதை வேட்பாளர்களுக்கு அளிக்காமல் தினகரன் ஏமாற்றி உள்ளார். இதில் முக்கிய பங்கு வகித்தவர் பழனியப்பன்.

இதனை அவரே சொல்ல வேண்டும். இல்லை என்றால் நான் சொல்ல வேண்டி வரும் என்றும் புகழேந்தி குற்றம் சாட்டி உள்ளார்.