அதிமுகவின் பிரச்சார பீரங்கிகள் ராதாரவி – நமீதா பாஜகவில் இணைந்தனர்!

அதிமுகவின் பிரச்சார பீரங்கிகளாக வலம் வந்த நடிகர் ராதாரவி, நமீதா ஆகியோர் பாஜகவில் இணைந்துள்ளனர்.

திருவள்ளூரில் நடைபெற்ற 16 மாவட்டங்களுக்கான பாஜக அலுவலக கட்டுமான பணிகளை, பாஜக தேசிய செயல் தலைவர் ஜே.பி.நட்டா, நேற்று அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

இதற்காக சென்னை வந்த ஜே.பி.நட்டா முன்னிலையில், நடிகர் ராதாரவி, நடிகை நமிதா ஆகியோர், அதிமுகவில் இருந்து விலகி, தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர்.

திராவிட இயக்கத்தின் முக்கிய தூண்களில் ஒருவர் நடிகர் எம்.ஆர்.ராதா. அவரது மகனான ராதாரவி, பாஜகவில் இணைந்திருப்பது, திராவிட இயக்கத்தினருக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.

நடிகர் ராதாரவிக்கு, அவ்வப்போது அதிமுக மற்றும் திமுக கட்சி தலைமையிடம் கருத்து வேறுபாடு ஏற்படுவது உண்டு. ஆனாலும், அவர் அதிமுகவிலிருந்து திமுகவுக்கோ அல்லது திமுகவில் இருந்து அதிமுகவுக்கோ மாறுவார்.

ஆனால், இவ்விரண்டு கட்சிகளை விடுத்து, அவர் பாஜகவில் இணைந்திருப்பது, திராவிட கட்சிகளுக்கு சற்று அதிர்ச்சியாகவே உள்ளது.

ஏனெனில், நடிகவேள் எம்.ஆர்.ராதா, தமிழக சினிமா மற்றும் அரசியல் வரலாற்றில் நிலைத்த புகழைப்பெற்றவர். நாடகம் மற்றும் சினிமாவில், பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பும் வசனங்களை பேசி நடித்தவர்.

அத்துடன், இறுதிக்காலம் வரை, தந்தை பெரியாரின் அசைக்க முடியாத தொண்டராக இருந்தவர். பெரியார் திடலில், இன்றும்  நடிகவேள் பெயரில் அரங்கம் இருப்பதே அதற்கு சான்றாகும்.

நடிகவேள் அளவுக்கு ராதாரவி, சுய மரியாதை கருத்துகளுக்கு சினிமாவில் முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்றாலும்,  திரையுலகில் தனக்கென தனி இடத்தை தக்க வைத்து வருபவர்.

அவரது தந்தையின் தொடர்ச்சியாக, அரசியலிலும் ஏதாவது ஒரு திராவிட இயக்கத்தில்தான் இதுவரை தொடர்ந்து இயங்கி வந்தார்.

தொடக்கத்தில் திமுக.வில் இருந்த ராதாரவி, மதிமுக உருவானபோது, வைகோவுடன் சென்றார். மதிமுக பெரிய அளவில்  சோபிக்காததால் மீண்டும் திமுக.வுக்கு வந்தார்.

அவர் திமுகவுக்கு வந்த சில காலத்தில், கடன் பிரச்சினையால், அவரது வீடு ஏலத்திற்கு வந்தது. அந்த பிரச்னையில் கருணாநிதி உதவி செய்யவில்லை. அதனால் அதிருப்தி அடைந்த ராதாரவி, அதிமுக.வில் இணைந்தார்.

அவருக்கு, 2002-ம் ஆண்டு சைதாப்பேட்டை இடைத்தேர்தலில், அதிமுக சார்பில், போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டு வெற்றியும் பெற்றார். ஆனால், ஜெயலலிதாவின் கடைசி காலத்தில் அவர் மீண்டும் திமுகவுக்கே சென்றார்.

ராதாரவி திமுகவில் இருந்தபோது, நடிகை நயன்தாராவை விமர்சித்த காரணத்தால், நெருடல் ஏற்பட்டு வெளியே வந்த அவர், மீண்டும் அதிமுக பக்கம் சாய்ந்தார்.

இப்படியாக, ஆறு முறை கட்சி மாறிய ராதாரவி, தற்போது ஏழாவது முறையாக பாஜகவில் நேற்று இணைந்துள்ளார்.

அதேபோல், அதிமுக.வின் மற்றொரு பிரச்சார பீரங்கியாக இருந்த நடிகை நமிதாவும், நேற்று ஜே.பி.நட்டா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.

அதிமுக கூட்டணியில் பாஜக நீடித்து வரும் நிலையில், அதிமுகவை சேர்ந்த இரண்டு பிரச்சார பீரங்கிகளான நடிகர் ராதாரவி, நடிகை நமீதா ஆகியோர், பாஜகவில் இணைந்திருப்பது, அதிமுக வட்டாரத்திலும் சிறு சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.