உள்ளாட்சி தேர்தல்: கண்ணாமூச்சி ஆடும் திமுக – அதிமுக!

தமிழக உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த சதி செய்வதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், திமுக தலைவர் ஸ்டாலினும் ஒருவர் மீது ஒருவர் மாறி மாறி குற்றம் சுமத்தி வருகின்றனர்.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் 2016 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டபோது பழங்குடியினர் இடஒதுக்கீடு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

அதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, வரும் டிசம்பர் மாதத்திற்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகி தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், திமுக மற்றும் சிலர் உச்சநீதி மன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்குகள் காரணமாக, குறித்த நேரத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

2016 ஆம் ஆண்டு உள்ளாட்சி தேர்தல் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தமிழக உள்ளாட்சிகளில் தொகுதி மறுவரையறை, வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, உரிய இடஒதுக்கீடுகள் பின்பற்றப்பட்டு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் மூன்றாண்டுகள் கடந்து விட்டன. இந்நிலையில்,  இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனைத் தொடர்ந்து, தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை முடிந்துவிட்டதாகவும் வருகிற டிசம்பர் மாதம், முதல் வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதனிடையே,  உள்ளாட்சி தேர்தலில் மாநகராட்சி,  நகராட்சி,  பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடைபெறும் என்று தமிழக அரசு அவசர சட்டத்தை பிறப்பித்தது.

ஆனால், உள்ளாட்சிகளில் தொகுதி மற்றும்  வார்டு மறுவரையை பணிகளை நிறைவு செய்யாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தக்கூடாது என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு பதில் அளித்த முதல்வர், புதிய மாவட்டங்கள் உருவாக்குவதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. ஆனால், நீதிமன்றம் மூலம் தோ்தலை நிறுத்த முயற்சி மேற்கொண்டுள்ளது என்றார்.

இது ஒருபுறம் இருக்க,  புதிதாக மாவட்டங்களில் தொகுதி மற்றும் வார்டுகள் மறுவரையறை செய்ய வேண்டும் என்று,  6 பேர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

முதல்வரின் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலுக்கு யாராவது தடை பெற்று தேர்தலை நிறுத்திடுவார்களா என்கிற எண்ணத்தில்தான் அ.தி.மு.க அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.

இந்த உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க அரசு பல குழப்பங்களை செய்திருக்கிறது. அதிமுக அரசு உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வார்டு மறுவரையறையை இதுவரை செய்யவில்லை. புதிதாக உருவாக்கப் பட்டிருக்கும் மாவட்டங்களுக்கும், இதுவரை வார்டு மறுவரையறையை செய்யவில்லை.

பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளின் பட்டியலின,  பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இன்னும் பின்பற்றவில்லை. மாவட்ட பஞ்சாயத்துகளுக்கும் இன்னும் அ.தி.மு.க அரசு இடஒதுக்கீடு செய்யவில்லை.

மேலும்,  மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டதை மாற்றி, மறைமுக தேர்தல் முறையை கொண்டுவந்துள்ளது என்று பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார் ஸ்டாலின்.

இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தல் விவகாரத்தில் அதிமுக,  திமுக கண்ணாமூச்சி விளையாடுகிறது என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் குற்றம் சாட்டியுள்ளார்.

ஆளும் கட்சியும்,  ஆள்வதற்கு ஆலாய் பறக்கும் கட்சியும் சுயநலத்துக்காக தேர்தல் நடக்காமல் பார்த்துக்கொள்கின்றன என்றும் அவர் கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில், திமுக மற்றும் அதிமுகவின் செயல்பாடுகளை கண்டித்து  சட்டப்பஞ்சாயத்து இயக்க நிர்வாகி செந்தில் ஆறுமுகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், மாநில சுயாட்சிக்காக குரல் கொடுக்கும் இரு கட்சிகளும் கிராம சுயாட்சியை கிள்ளுக்கீரையாக நினைத்து புறந்தள்ளுவது ஜனநாயகப் படுகொலையின் உச்சம் என்று கூறி உள்ளார்.

இரு கட்சிகளும் தாங்கள் நினைத்ததைச் செய்து வென்று விட்டார்கள். தோற்றது மக்கள்தான் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.