சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் முறை:    டிசம்பர் 15 வரை அவகாசம்!

சுங்கச்சாவடிகளில் காத்திருப்பது, கட்டணத்தகராறு போன்றவற்றைத் தவிர்க்க மத்திய அரசு, நாளை முதல், ஃபாஸ்டேக் (FASTag) என்னும் புதிய முறையை அமல்படுத்துவதாக அறிவித்தது.

தற்போது அதற்கான கால அவகாசம் வரும் டிசம்பர் 15 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மத்திய, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் பணமில்லாமல் கட்டணம் செலுத்தும் ஃபாஸ்டேக் செயலி முறையை அமல்படுத்த உள்ளது.

இதன்படி, செயலியில் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் மூலம் ஒவ்வொரு முறை சுங்கச்சவடியை வாகனம் கடக்கும்போது தானாக சுங்கக்கட்டணம் கழிக்கப்படும்.

இதற்கு, வாகன ஓட்டிகள் செயலியை டவுன்லோடு செய்து அதில் வங்கிக்கணக்கை இணைத்து ரீசார்ஜ் செய்தால் போதுமானது.

உங்களுக்கான பார்கோடு அடங்கிய ஸ்டிக்கரைப் பெற்று உங்கள் வாகனத்தின் முன் பக்கக்கண்ணாடியில் ஒட்டிவிட வேண்டும்.

அதன் பின்னர், உங்கள் வாகனம் ஒவ்வொருமுறை சுங்கச்சாவடியை கடக்கும்போதும் உங்கள் ஸ்டிக்கரில் அடங்கியுள்ள பார்கோடு சுங்கச்சாவடியில் உள்ள ஆண்டெனாவால் டிகோட் செய்யப்பட்டு,  ஃபாஸ்டேக் கணக்கிலிருந்து கட்டணத் தொகை வரவு வைத்துக்கொள்ளப்படும்.

இதற்கு ஏற்ப, வாகன ஓட்டிகள்,  ஃபாஸ்டேக் அக்கவுண்ட்டை ரீசார்ஜ் செய்ய வேண்டும்.

தேசிய மின்னணு கட்டண வசூல் திட்டத்தின் கீழ், ஃபாஸ்டேக் வழியாக மட்டுமே இனி சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டிசம்பர் ஒன்றாம் தேதிக்கு பிறகு செயலியை பதிவிறக்கம் செய்யாமல் ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இல்லாமல் சுங்கச் சாவடியை கடக்கும் வாகன ஓட்டிகள் ரொக்கம் அல்லது டெபிட், கிரெடிட் கார்டு மூலமாக பணம் செலுத்துவதாக இருந்தால், கட்டண தொகை இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்திருந்தது.

ஆனால் நாடெங்கும் இதற்கான வழிமுறைக்கு வாகன ஓட்டிகள் மாறுவதற்கு பல சிரமங்கள் இருந்தன. ஃபாஸ்டேக் ஸ்டிக்கரை வாங்க முடியவில்லை என்கிற குற்றச்சாட்டும் எழுந்தது.

இதையடுத்து  மத்திய அரசின் சாலைப்போக்குவரத்து நிறுவனம், இதற்கு   மேலும் 15 நாட்கள் அவகாசம் அளித்து, டிசம்பர் 15 வரை நீட்டித்துள்ளது.