சமூக ஊடகங்களில் திமுகவை திணறடிக்கும் எதிர்கட்சிகள்: அதிருப்தியில் ஸ்டாலின்!

திமுகவுக்கு பேச்சும் எழுத்துமே ஆயுதம்… காங்கிரசுக்கு ஆயுத எழுத்துக் கூட தெரியாது என்று சொல்லப்பட்டதுண்டு….

பேச்சு, எழுத்து, கலை, இலக்கியம், சினிமா, ஊடகம் என எந்த துறையை எடுத்தாலும், அதை முழுமையாக பயன்படுத்திக் கொள்வதோடு, தனி முத்திரை பதிப்பதில் திமுகவுக்கே முதலிடம் என்பது கடந்த கால அரசியல் வரலாறு.

அண்ணா காலம் தொடங்கி கலைஞர் காலம் வரை, திமுகவின் அந்த வரலாற்றை யாராலும் மாற்ற முடியவில்லை.

திமுகவுக்கு பேச்சும், எழுத்துமே ஆயுதம், காங்கிரஸ் கட்சிக்கு ஆயுத எழுத்து  கூட தெரியாது என்று, ஆரம்ப காலத்தில் கூறப்படுவது உண்டு.

அந்த அளவுக்கு அண்ணாவும், கலைஞரும் பொது வெளிகளையும், ஊடகங்களையும் மிகச்சரியாக பயன்படுத்திக் கொண்டனர்.

தொண்ணூறுகளின் மத்திய காலம் வரை, அன்றாட நிகழ்வுகளை அறிந்து கொள்ள வானொலி, பத்திரிகையை தவிர வேறு ஊடகங்கள் எதுவும் இல்லை.

அப்போது இருந்த அரசு தொலைக்காட்சி, காஷ்மீரை பற்றி சொல்லும் அளவுக்கு கூட கன்னியாகுமரியை பற்றி சொல்லாது.

ஆனால், அதற்குப்பின் நிலைமையே தலை கீழாக மாறிவிட்டது. தனியார் தொலைகாட்சிகள் வந்து பரபரப்பான உள்ளூர் செய்திகளை கொடுக்க, மக்கள் தூர்தர்ஷனையே மறந்து விட்டனர்.

தமிழகத்தில் இதிலும் முதலில் வந்தது, திமுக குடும்பத்தின் சன் டிவி தான். அதன் பிறகு 24 மணி நேர செய்தி தொலைக்காட்சியை, முதன்முதலில்  கொண்டு வந்ததும் அதே குழுமம்தான். தற்போது எத்தனையோ 24 மணி நேர சேனல்கள் வந்துவிட்டன.

அதுவரை திமுகவிற்கு எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால், அதன் பின்னர் ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்த சமூக ஊடகங்கள்தான், தலைவலி கொடுக்க ஆரம்பித்தன.

இணைய தளம், முகநூல், வாட்ஸ் அப், டுவிட்டர் என அடுத்தடுத்த பரிணாமங்கள் சமூக ஊடகங்களில் உருவாக தொடங்கின. ஒவ்வொரு கட்சியிலும், ஐ.டி விங் என ஒரு புதிய அணியே உருவாக்கும் கட்டாயமும் ஏற்பட்டது.

இதிலும் ஆரம்ப கட்டத்தில் திமுகவே முன்னிலை வகித்தது. ஆனால், அதிமுக, பாமக போன்ற கட்சிகள் இன்று சமூக ஊடகங்களில், திமுகவை பின்னுக்கு தள்ளும் அளவுக்கு கோலோச்ச தொடங்கி உள்ளன.

ஆளும் கட்சியை இயங்கவிடாமல் தடுமாற வைக்கும் அளவில், எதிர் கட்சிகளின் ஊடக பங்கும், சமூக ஊடகங்களின் பங்கும் எப்போதும் இருக்கும் என்பதே நடைமுறை.

ஆனால், அண்மைக்காலமாக, எதிர்கட்சியான திமுகவை, இயங்கவிடாமல், புதுப்புது சிக்கல்களை உருவாக்கி, பாமக, அதிமுக போன்ற கட்சிகள், சமூக ஊடகங்களின் மூலம் நெருக்கடிகளை கொடுத்து வருகின்றன.

இதற்கு, திமுக தகவல் தொழில்நுட்ப அணி, உரிய பதிலை கொடுக்க முடியாமலும், மாற்று கட்சிகளை திசைதிருப்ப முடியாமலும் திணறி வருகிறது.

அண்மையில் ஸ்டாலினின் மிசா சர்ச்சை, முரசொலி பஞ்சமி விவகாரம் போன்றவற்றில், அதிமுக, பாமக போன்ற கட்சிகள், சமூக ஊடகங்களில் ஆற்றிய வினைகளுக்கு, திமுகவால் எதிர்வினை ஆற்றமுடியாமலே போய்விட்டது.

கலைஞர் இருந்தவரை, அவரது பேச்சு, எழுத்து, அறிக்கைகள், பேட்டிகள் என அனைத்தும் எதிர் முகாம்களை இயங்க விடாமல், திணறடிக்கும் விதமாக மிகவும் வலிமையாக இருந்தது.

ஆனால், ஸ்டாலின் திமுக தலைவரான பிறகு, எதிர் முகாம்கள் திமுகவை திணறடித்துக்கொண்டு இருக்கின்றன.

இது ஸ்டாலினை அதிருப்தி அடைய வைத்துள்ளதால், திமுகவில் மாற்று ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.