தொகுதி மறுவரையறை செய்யும் வரை உள்ளாட்சி தேர்தல் கூடாது:  உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு!

அடுத்த சட்டமன்ற தேர்தல் நடைபெற சற்றேறக்குறைய இன்னும் ஓராண்டே இருப்பதால், அதற்குள் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பதை, அதிமுக, திமுக ஆகிய இரு கூட்டணிகளுமே விரும்பவில்லை என்று பலரும் கூறி வந்தனர்.

எனினும், அடுத்த மாதத்திற்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி ஆக வேண்டும் என்ற நிர்பந்தம், நீதி மன்றத்தால் உருவாக்கப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை மறைமுக தேர்தலாக நடத்துவதற்கும், ஊரக பகுதிகளில் மின்னணு எந்திரங்கள் மூலம், வாக்குப்பதிவு நடத்துவதற்கும், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், கொல்லைப்புற வழியாக சென்று உள்ளாட்சி தேர்தலை தடுத்து நிறுத்த திமுக முயற்சி செய்கிறது என்று, நேற்று கூட, திருப்பத்தூர் மாவட்ட தொடக்க விழாவில் முதல்வர் எடப்பாடி பேசினார்.

மாவட்டங்கள் பிறப்புக்கும், உள்ளாட்சி தேர்தலுக்கும் சம்பந்தம் இல்லை. 2018  ம் ஆண்டு வரையறை செய்யப்பட்ட தொகுதி அடிப்படையிலேயே, தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இது ஒரு புறம் இருக்க, உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அனைத்து கட்சி கூட்டமும், தமிழக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக  உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் நேற்று மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடுவதற்கு முன்பாக, தொகுதி மற்றும் வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு, சுழற்சி முறை உள்ளிட்ட சட்ட நடைமுறைகளை பூர்த்தி செய்ய, தமிழக அரசு மற்றும் தமிழக தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும்.

அந்தப்பணிகள் நிறைவு செய்த பின்னரே, உள்ளாட்சி தேர்தல் அட்டவணையை  வெளியிடவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களுக்கும் வார்டு மறுவரையறை செய்த பின்னரே, தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று, ஏற்கனவே இவ்வழக்கு தொடர்பாக திமுக மனு தாக்கல் செய்துள்ளது.

இந்த மனு, வரும் 13 ம் தேதி விசாரணைக்கு வரவிருக்கும் நிலையில், நேற்று, திமுக சார்பில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இதனால், தமிழக உள்ளாட்சி தேர்தல், குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறுமா? என்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.