வாழ்வில் முன்னேற்றம் தரும் பஞ்சமகா புருஷ யோகம்! உங்கள் ஜாதகத்தில் இருக்கிறதா?

ஜோதிடத்தில் எண்ணற்ற யோகங்கள் சொல்லப்பட்டிருந்தாலும், ஒரு ஜாதகத்தில், பஞ்சமகா புருஷ யோகம் என்று சொல்லப்படும் ஐந்து யோகங்களில் ஏதாவது ஒன்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், அவர்கள் எவ்வளவு சிரமப்பட்டாலும், ஏதாவது ஒரு காலகட்டத்தில் எப்படியாவது முன்னேற்றத்தை சந்தித்து விடுவார்கள்.

பஞ்ச மகா புருஷ யோகம் என்பது, சூரியன், சந்திரன், நிழல் கிரகங்களான ராகு, கேது ஆகியவற்றை தவிர்த்து, செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் ஆட்சி அல்லது உச்சம் பெற்று கேந்திரத்தில் இருக்க வேண்டும் என்று பலதீபிகை குறிப்பிடுகிறது.

ருசக யோகம்: செவ்வாய் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருந்தால் அதற்கு ருசக யோகம் என்று பெயர்.

ருசக யோகம் உள்ளவர்கள், நீண்ட முகமும், பிடிவாத குணமும் கொண்டவர்கள். தனவான்கள். சூரர்களாகவும், எதிரிகளை அழிப்பவர்களாகவும் இருப்பார்கள். சேனாதிபதியாகவும், படைத்தலைவர்களாகவும், வெற்றி வீரர்களாகவும் வலம் வருவார்கள்.

அதே சமயம் செவ்வாய் நான்காம் வீட்டில் இருப்பது அவ்வளவு நல்லதல்ல. வீடு, மனை காரகனான செவ்வாய், வீடு மனை பாவமான நான்காம் இடத்தில் இருப்பது காரகோ பாவனாஸ்தி என்று சொல்லப்படுகிறது. அதாவது, அந்த பாவம் சுபபலன்களை தராது.

பத்ர யோகம்: புதன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பதாகும்.

பத்ர யோகம் உள்ளவர்கள், நீண்ட ஆயுளும், கூர்மையான புத்தியும் கொண்டவர்களாக இருப்பார்கள். தோஷமற்றவர்கள், மக்களால் புகழப்படுபவர்கள், பூமியை ஆளும் யோகம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். ஐஸ்வரியம் உள்ளவர்கள். கற்றறிந்தவர்கள் நிறைந்த சபையில் பேசும் திறன் படைத்தவர்களாகவும் இருப்பார்கள்.

எனினும், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற உபய லக்னங்களுக்கு கேந்திரத்தில் புதன் இருப்பது, கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும். அதாவது அந்த பாவங்களின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும்.

ஹம்ச யோகம்: குரு ஆட்சி அல்லது உச்சம் பெற்று லக்னம் அல்லது சந்திரனுக்கு கேந்திரத்தில் இருப்பது ஹம்ச யோகம் ஆகும்.

ஹம்ச யோகம் உள்ளவர்கள் சாதுக்களால் பாராட்டப் படுவார்கள். பூமியை உடையவர்கள். கை மற்றும் கால்களில் சங்கம் மற்றும் பத்ம ரேகைகளை கொண்டு இருப்பார்கள். அழகிய தேகம் உடையவர்களாக இருப்பார்கள். ருசியான உணவை அருந்துவார்கள். தான தர்மங்களில் ஈடுபாடும் நம்பிக்கையும் கொண்டு செயல்படுவார்கள்.

அதே சமயம், மிதுனம், கன்னி, தனுசு, மீனம் போன்ற உபய லக்னங்களுக்கு கேந்திரத்தில் குரு இருப்பது, கேந்திர ஆதிபத்திய தோஷத்தை ஏற்படுத்தும். அதாவது அந்த பாவங்களின் காரகத்துவங்கள் பாதிக்கப்படும்.

மாளவிகா யோகம்: சுக்கிரன் ஆட்சி அல்லது உச்சம் பெற்று சந்திரன் அல்லது லக்னத்திற்கு கேந்திரத்தில் இருப்பது மாளவிகா யோகமாகும்.

இந்த யோகம் உள்ளவர்கள், உறுதியான உடலும் மனமும் கொண்டவர்களாக இருப்பார்கள். தனம் நிறைந்திருக்கும். வசதியான மனை, நல்ல மனைவி, வாகன வசதிகள் அமையும். கேளிக்கைகளில் ஈடுபாடு உண்டு. கலைத்திறன் மிகுந்திருக்கும். ருசியான உணவு வகைகளை விரும்பி உண்ணுவார்கள்.

அதேசமயம், களத்திரகாரகன் சுக்கிரன், களத்திர பாவமான ஏழாம் இடத்தில் அமர்வது காரகோ பாவ நாஸ்தி ஆகும். அதாவது ஏழாம் இடத்து காரகத்துவத்தை பாதிக்கும்.

சச யோகம்: சனி ஆட்சி அல்லது உச்சம் பெற்று சந்திரன் அல்லது லக்னத்திற்கு கேந்திரத்தில் அமைவது சச யோகமாகும்.

இந்த யோகத்தில் பிறந்தவர்கள், மக்களால் கொண்டாடப்படுபவர்களாக இருப்பார்கள். கிராம தலைவன், பெரிய அமைப்புகளுக்கு தலைவன் போன்றவர்களாகவும் இருப்பார்கள். நல்ல பணியாளர்கள் அமையப் பெறுவார்கள். தான வசதி நிறைந்திருக்கும். மற்றவர்களுக்காக பாடுபடுபவராகவும் இருப்பார்கள்.

சனி கேந்திரத்தில் அமர்ந்தாலே கர்ம யோகம் அல்லது கர்ம தோஷம் என்று சொல்லப்படுகிறது. கர்ம தோஷம் அல்லது கர்ம யோகம் என்றால், தமக்காக வாழாமல் அடுத்தவர்களுக்காக உழைப்பதாகும்.

மேற்கண்ட ஐந்து யோகத்தில் ஏதாவது ஒரு யோகம் இருந்தால் கூட, அவர்கள் வாழ்வில் ஏதாவது ஒரு காலகட்டத்தில் முன்னுக்கு வந்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.