கார்த்தி சிதம்பரம் கைதுக்காக காத்திருக்கிறது அமலாக்கத்துறை: உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர் தகவல்!

ஐ.என்.எக்ஸ் மீடியா சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில், கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய அமலாக்கத்துறை காத்திருப்பதாக, மத்திய அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

அந்த வழக்கில் ஜாமீன் கோரி, காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு நேற்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் ஆர் பானுமதி,  ஏ.எஸ்.போபண்ணா,  ரிஷிகேஷ் ராய் ஆகியோர் முன்னிலையில்,  அமலாக்கப் பிரிவு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதிட்டார்.

சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கினால் சாட்சியங்களைக் கலைத்துவிடுவார். ஆதலால் ஜாமீன் வழங்கக் கூடாது என்று துஷார் மேத்தா குறிப்பிட்டார். ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரமும் அங்கு இருந்தார்.

அப்போது “இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்தின் ஜாமீன் பெற்று கார்த்தி சிதம்பரம் வெளியே இருக்கிறார். உயர் நீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமீனை ரத்து செய்தால், அவரையும் கைது செய்ய அமலாக்கப் பிரிவு காத்திருக்கிறது என்றார்.

ஆனால், சட்டவிரோத பணப் பரிமாற்றத்தின் சில அம்சங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் கார்த்தி வழக்குத் தொடர்ந்துள்ளார் என்றும் தெரிவித்தார்.

துஷார் மேத்தா தன்னைப் பற்றி நீதிபதியிடம் தெரிவிப்பதைப் பார்த்த கார்த்தி சிதம்பரம், சிறிது நேரம் யாரையும் பார்க்காமல், எந்தவிதமான உணர்ச்சியையும் காட்டாமலும், முகத்தைத் திருப்பிக் கொண்டார்.