பஞ்சமி போராட்டத்திற்கு தலைமை ஏற்ற சேகர்பாபு மீது நடவடிக்கை என்ன?: ராமதாஸ் கேள்வி?

அசுரன் படத்திற்கு, திமுக தலைவர் பாராட்டு தெரிவித்ததில் எழுந்த பஞ்சமி சர்ச்சை, இன்று நீதிமன்ற அவதூறு வழக்கு வரை வந்து நிற்கிறது.

பஞ்சமி நில சர்ச்சை தொடர்பாக, திமுக சார்பில் அனுப்பப்பட்ட வக்கீல் நோட்டீசுக்கு, பதில் அனுப்பி இருக்கிறார் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

இந்த விவகாரத்தில், திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ராமதாசுக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

இது தொடர்பாக, ராமதாஸ் சார்பில் வழக்கறிஞர் பாலு, ஆர்.எஸ்.பாரதியின் வழக்கறிஞர் நீலகண்டனுக்கு பதில் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

அதில், முரசொலி அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்று, தமக்கு முன்னரே அதிமுக உள்ளிட்ட பலரும் குற்றம் சாட்டி இருக்கும் நிலையில், தன்னை மட்டும் திமுக குறி வைப்பது, அரசிளுக்காகத்தான் என்று கூறியுள்ளது ராமதாஸ் தரப்பு.

மேலும், அசுரன் படத்திற்கு ஸ்டாலின் தெரிவித்த பாராட்டு முதல், தமக்கு அவதூறு வழக்கு நோட்டீஸ் வந்துள்ளது வரை இந்த பதில் நோட்டீசில் ராமதாஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ஏதோ ராமாதாஸ் மட்டும்தான் முதன்முதலில் இந்த பிரச்சினையை எழுப்பியதைப்போல, அவருக்கு எதிராக அவதூறுகளை பரப்பி வருகிறீர்கள்.

பஞ்சமி நிலத்தை அபகரித்து, முரசொலி அறக்கட்டளை கட்டியதாக, ஏற்கனவே பல்வேறு அமைப்புகள் குற்றம் சாட்டி உள்ளன.

மண்ணின் மைந்தர் கழகம் என்ற தலித் அமைப்பு 2005 ம் ஆண்டு போராட்டம் நடத்தி இருக்கிறது.

2010 ம் ஆண்டு, இந்த விவகாரத்திற்காக, அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா தன் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவித்தார்.

தற்போது திமுகவில் இருக்கும் சேகர்பாபு தான், அந்த ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார்.

ஆட்சியில் இருந்தபோது, அதிமுக மீதோ, சேகர்பாபு மீதோ நடவடிக்கை எடுக்காமல், பாமக நிறுவனர் மீது மட்டும் புகார் சொல்வது அரசியல் ரீதியானது என்று அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.