குணச்சித்திர நடிகர் பாலாசிங் மறைவு: திரையுலகினர் அஞ்சலி!

தமிழ் சினிமாவில் இரண்டு தலைமுறைகளாக நடித்து வந்த பிரபல திரைப்பட நடிகர் பாலா சிங் உலநலக் குறைவால் இயற்கை எய்தினார். அவருக்கு வயது 67.

கடுமையான மூச்சுத் திணறல் பிரச்னை காரணமாக வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர்  சிகிச்சை பலனின்றி  இன்று அதிகாலை மரணம் அடைந்தார்.

பொதுமக்கள் அஞ்சலிக்காக விருகம்பாக்கம் போலிஸ் ஸ்டேஷன் அருகில் உள்ள அவரது வீட்டில், இன்று  மாலை வரை பாலாசிங்-ன் உடல் வைக்கப்படுகிறது. பின் அவரது சொந்த ஊரான நாகர்கோவிலுக்கு எடுத்து செல்லப்படுகிறது.

1995 ம் ஆண்டு நாசர் இயக்கத்தில் வெளிவந்த அவதாரம் படத்தில் அறிமுகமான பாலா சிங்,  2019 ம் ஆண்டு மகாமுனி திரைப்படம் வரை பயணித்தார்.

இந்தியன், ராசி, புதுப்பேட்டை, மறுமலர்ச்சி, என்.ஜி.கே போன்ற நூறு  படங்களுக்கு மேல் பல்வேறு  குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

இவரின் நடிப்பை பாராட்டும் வகையில்  தமிழக அரசு இவருக்கு  கலைமாமணி  விருது கொடுத்து கவுரப்படுத்தியது.

தமிழ் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தின் தன்மை, சாயல், மொழி போன்ற கட்டமைப்புகளில் பாலா சிங்கின் பங்கு அளப்பரியது.