மகாராஷ்டிரா முதல்வர் ஆகிறார் உத்தவ் தாக்கரே: நாளை பதவி ஏற்பு விழா!

மகாராஷ்டிரா மாநில முதல்வராக சிவாஜி பார்க் மைதானத்தில் நாளை பதவி ஏற்கிறார் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்தில் திடீர் திருப்பமாக நேற்று  துணை முதல்வர் அஜித்பவார், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.

இதன் மூலம் நம்பிக்கை வாக்கெடுப்பை சந்திக்காமலேயே பாரதீய ஜனதா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. பதவி ஏற்ற  நான்கே நாட்களில்  பாஜக ஆட்சி முடிவுக்கு வந்தது.

இதையடுத்து, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் ஆட்சி அமைக்க தீவிரம் காட்டின. நேற்று மாலை மும்பை புறநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மூன்று  கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது..

இந்த கூட்டத்தில் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட், முன்னாள் முதல்-மந்திரி அசோக் சவான் மற்றும் அக்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

இதில், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கூட்டணியை வழிநடத்த ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டது.

மேலும்  மூன்று  கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தேர்வு செய்யப்பட்டார். அவரது பெயரை தேசியவாத காங்கிரஸ் மாநில தலைவர் ஜெயந்த் பாட்டீல், காங்கிரஸ் மாநில தலைவர் பாலசாகேப் தோரட் ஆகியோர் முன்மொழிந்தனர். முதல்வர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்ட பின்னர், உத்தவ் தாக்கரே பேசியதாவது:-

நான் காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கு இந்த தருணத்தில் நன்றி சொல்ல விரும்புகிறேன். வெவ்வேறு சித்தாந்தங்களை கொண்ட கட்சிகள் ஒன்று சேர்ந்து இருக்கிறோம்.

முப்பது  ஆண்டுகள் நண்பர்களாக இருந்தவர்கள் எங்களை நம்பவில்லை. ஆனால் நாங்கள் முப்பது  ஆண்டுகளாக யாருக்கு எதிராக போராடினோமோ அவர்கள் என்னை நம்புகிறார்கள். எனது அரசாங்கம் பழிவாங்கும் விதத்தில் செயல்படாது.

பொது மக்கள் இந்த அரசாங்கத்தை தங்கள் சொந்த அரசாங்கமாக நினைக்க வேண்டும். நான் பதவி ஏற்ற பிறகு மூத்த சகோதரரை அதாவது  பிரதமர் மோடியை சந்திப்பேன் என்றார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார்,  மும்பை சிவாஜிபார்க் மைதானத்தில் வியாழக்கிழமை புதிய அரசு பதவி ஏற்பு விழா நடக்கிறது. அப்போது மராட்டியத்தின் அடுத்த முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே பதவி ஏற்பார்  என்று கூறினார்.