மகாராஷ்டிராவில் சிவசேனா – என்சிபிக்கு தலா  15 அமைச்சர்கள்: காங்கிரசுக்கு  13 அமைச்சர்கள் மற்றும் சபாநாயகர்!

மகாராஷ்டிரா  மாநிலத்தில் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசில் தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனாவுக்கு தலா 15 அமைச்சர் பதவிகள் வழங்கப்படுகின்றன.

காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சர் பதவிகளும்,  சபாநாயகர் பதவியும் வழங்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மகாராஷ்டிராவில் கடந்த ஒருமாதமாக இழுபறி நீடித்த நிலையில், சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகள் மகா விகாஸ் அகாதி என்ற பெயரில் கூட்டணி அமைத்துள்ளன.

இதையடுத்து, சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசு நாளை பொறுப்பேற்கிறது. முதல்வராக உத்தவ் தாக்கரே பதவி ஏற்கிறார்.

288 எம்எல்ஏக்களைக் கொண்ட மகாராஷ்டிராவில், சிவசேனா கூட்டணியில்  தற்போது 169 எம்எல்ஏக்கள் உள்ளனர்.

எம்எல்ஏக்கள் எண்ணிக்கையில் 15 சதவிகத்திற்கு மேல் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடாது என்பதால், அதிகபட்சமாக 43 அமைச்சர்கள் வரை இடம் பெறலாம்.

அதனால், அந்தந்த கட்சிகளின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப அமைச்சரவையில் இடங்கள் ஓதுக்கப்பட உள்ளன. அதன்படி, சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தலா 15 அமைச்சர்கள் ஒதுக்கப்பட உள்ளன.

சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வர் ஆவதால், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்பட உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கு 13 அமைச்சர்களும், சபாநாயகர் பதவியும் ஒதுக்கப்பட உள்ளது.

சிவசேனா கட்சி சார்பில், நாராயண் ரானே, மனோகர் ஜோஷி ஆகிய இரண்டு பேர் இதுவரை முதல்வராக பொறுப்பேற்றுள்ளனர். தற்போது மூன்றாவதாக உத்தவ் தாக்கரே பொறுப்பேற்கிறார்.

பால்தாக்கரே குடும்பத்தில் இருந்து நேரடியாக முதல்வர் பொறுப்பேற்பது உத்தவ் தாக்கரே என்பது குறிப்பிடத்தக்கது.