விக்ரவாண்டிக்கு வியூகம் வகுத்த சுனில் விடுவிப்பு: பிரசாந்த் கிஷோரை நாடும் திமுக!

திமுகவின் அரசியல் வியூக நிபுணராக இதுவரை இருந்து வந்த சுனில் என்பவர் விலகியுள்ள நிலையில், வரும் தேர்தலில் பிரசாந்த் கிஷோரை அக்கட்சி நாடி உள்ளதாக கூறப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினின் நமக்கு நாமே பிரச்சாரம் தொடங்கி, கடந்த சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தல் வரை, தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் முக்கிய இடத்தில் சுனில் என்பவர் இருந்து வந்தார்.

தேர்தலில் யார் யாருக்கு சீட் வழங்குவது என்பது தொடங்கி, ஸ்டாலினின் அரசியல் வியூகங்கள் அனைத்தையும் வகுத்துக் கொடுத்தவர் அவர்தான்.

அவர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் அனைத்தும், திமுகவுக்கு தொடர்ந்து நல்ல ரிசல்டை கொடுத்துக் கொண்டுதான் இருந்தது.

ஆனால், விக்கிரவாண்டி இடைத்தேர்தலின்போது, வன்னியர் இடஒதுக்கீடு விவகாரத்தை மையப்படுத்தி, நீண்ட நெடிய அறிக்கைக்கு ஐடியா கொடுத்தவர் சுனில்தான் என்று சொல்லப்படுகிறது.

ஆனால், இந்த வியூகம் திமுகவுக்கு எதிர்மறையான ரிசல்டை தந்துவிட்டது. அத்துடன், பஞ்சமி விவகாரம் தொடங்கி ஸ்டாலினுக்கு, பாமக மூலமாக பல்வேறு சிக்கலையும் தந்து விட்டது.

அதைத்தொடர்ந்து, பிரதமர் தொடங்கி, நிதிஷ் குமார், ஜகன்மோகன் ரெட்டி என பலருக்கு அரசியல் வியூக நிபுணராக பணியாற்றிய பிரசாந்த் கிஷோரை, திமுக நாடுவதாக தகவல் வெளியானது.

அதேசமயம், சுனிலை விடுவிக்க திமுக விரும்பவில்லை. அவரும் பிரசாந்த் கிஷோர் குழுவில் இணைந்து பணியாற்றட்டும் என்று திமுக தலைமை கூறியது.

ஆனால், சுனில் அந்த குழுவோடு இணைந்து பணியாற்ற விரும்பவில்லை, இதன் காரணமாகவே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமாக இருந்து, வெற்றிக்கான பல்வேறு வியூகங்களை வகுத்து கொடுத்ததில் சுனிலின் பங்கு தவிர்க்க முடியாதது.

ஆனால், சுனிலுடனான ஸ்டாலினின் நெருக்கம், பல்வேறு மாவட்ட செயலாளர்களை அதிருப்தி அடைய வைத்தது உண்மை. ஆனாலும், ஸ்டாலின் சுனிலுக்கு உரிய மரியாதையும் முக்கியத்துவத்தையும் தொடர்ந்து அளித்தே வந்துள்ளார்.

தற்போது, அந்த இடத்திற்கு பிரசாந்த் கிஷோர் வர இருப்பதால், அது என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்று இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது.

ஏற்கனவே, அதிமுக, கமலஹாசன், ரஜினிகாந்த் போன்றவர்களை பிரசாந்த் கிஷோர் அணுகி தமது தேர்தல் வியூகம் பற்றி கூறி இருந்தும், அதை அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

எனினும், கிஷோர் தரப்பில், அண்மையில் எடுத்த சர்வே, திமுகவுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்பட்டதால், திமுக அவரை நாடுவதாகவும் சொல்லப்படுகிறது.

மற்ற மாநிலங்களில், கையாளப்படும் தேர்தல் வியூகங்கள், தமிழகத்தில் எடுபடுமா? பிரசாந்த் கிஷோர், தமது வியூகத்தை வெற்றி வியூகமாக திமுகவுக்கு அமைத்துக் கொடுப்பாரா? என்பது தேர்தலில்தான் தெரியவரும்.