சரிந்து வரும் பாஜக செல்வாக்கு: எடுபடாத மோடி-அமித்ஷா வியூகம்!

கூட்டணி கட்சிகளின் ஆதரவு இல்லாமலேயே, இரண்டாவது முறையாக அசுர பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளது பாஜக. இரண்டாவது முறையும் மோடியே பிரதமராக பொறுப்பேற்றுள்ளார்.

ஏற்கனவே, இரண்டு முறை தொடர்ந்து ஆட்சியைப் பிடித்து,  வீழ்த்த முடியாத கட்சி என்ற நிலையில் இருந்த காங்கிரசை, 2014 ம் ஆண்டு தேர்தலில், பாஜக கடுமையாக வீழ்த்தி அரியணை ஏறியது.

காங்கிரஸ் கட்சியோ, எதிர் கட்சி என்ற அந்தஸ்தை கூட பிடிக்க முடியாமல் போதுமான எம்பி க்கள் இல்லாமல் தவித்தது.

மோடி தலைமையில் முதன்முதலாக, பாஜக ஆட்சியை கைப்பற்றியபோது, ஏழு மாநிலங்களில் மட்டுமே பாஜக ஆட்சிப் பொறுப்பில் இருந்தது. ஆனால் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள், 21 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது.

மோடி அலையும், அமித்ஷாவின் ராஜ தந்திரமும் இந்த வெற்றியை கொண்டு வந்து சேர்த்தவர்கள் என்று பாஜகவினர் புளங்காகிதம் அடைந்தனர். இதே நிலை நீடித்தால், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் காவிக்கொடியே பறக்கும் என்றும் பேசப்பட்டது.

ஆனாலும் மோடி அலையும், அமித்ஷாவின் ராஜ தந்திரமும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள்ளாகவே, அலையும் ஓய்ந்து, ராஜ தந்திரமும் வீழ்ந்த போக ஆரம்பித்து விட்டது.

2017 வரை பாஜகவின் பிடியில் இருந்த பல  மாநிலங்கள்  2018 ம் ஆண்டு கைவிட்டுப் போக ஆரம்பித்தன. அந்தந்த மாநிலங்களில் கூட்டணி காட்சிகளும், தேர்தல் வியூகங்களும் மாறிப்போனதே இதற்கு காரணமாகும்.

2018-ம் ஆண்டு தெலங்கானா, ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மிசோரம், சத்தீஸ்கர் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடந்த சட்டமன்ற தேர்தல்களில், ஒரு மாநிலத்தில் கூட பாஜக வெற்றி பெறவில்லை.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. மிசோரம், தெலங்கான ஆகியவற்றை மாநில கட்சிகள் கைப்பற்றின.

ஆந்திராவில் சந்திரபாபு கட்சியுடன் கூட்டணி முறிந்தது. அங்கு நடந்த தேர்தலில் ஜகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் அமோக  வெற்றி பெற்றது. பாஜகவுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.

கர்நாடகாவில், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா, தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய நேர்ந்தது. மீண்டும் அவர் முதல்வர் பதவியில் அமர எத்தனையோ  பிரயத்தனங்கள் செய்ய வேண்டி இருந்தன.

ஹரியானா மாநிலத்தில், எத்தனையோ சமரசங்களுக்கு பின்னர், ஜாட் இனத்தலைவர் துஷ்யந்த் சவுதாலா தயவுடன்தான், அங்கு பாஜக கூட்டணி ஆட்சியை அமைத்துள்ளது.

மகாராஷ்டிராவில், எவ்வளவோ முயற்சித்தும், தேசியவாத காங்கிரசின் முக்கிய புள்ளியான அஜித்பாவாரை வளைத்தும், பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றாலும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் நான்கே நாளில் அவர் ராஜினாமா செய்யும் நிலைக்கு ஆளானார்.

தற்போது அங்கு, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கின்றன. சிவசேனாவின் உத்தவ் முதல்வராக பொறுப்பேற்கிறார்.

இதனால், மோடி அலை, அமித்ஷா ராஜ தந்திரம் எல்லாம் இனி வரும் காலங்களில் எடுபடுமா? என்பது சந்தேகமே.

மகாராஷ்டிரா மாநிலத்தில், பாஜக எடுத்த அஸ்திரங்கள், வகுத்த வியூகங்கள் என அனைத்தையும், சிவசேனா – என்சிபி – காங்கிரஸ் கட்சிகள் இணைந்து தவிடுபொடி ஆக்கிவிட்டன.

இதற்கு நிச்சயம் பாதக பதிலடி கொடுக்காமல் இருக்காது. எனவே, இதன் விளைவுகள் எப்படி இருந்தாலும், அதை சந்திக்க நாங்கள் தயார் என்று ஏற்கனவே, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறி இருக்கிறார்.

.இது ஒரு பக்கம் இருக்க, ஒரு கட்சி உச்சத்தை தொடுவதும், சரிவை சந்திப்பதும் ஜனநாயகத்தில் சகஜமான ஒன்றே. எனவே, தங்களது பழைய வியூகத்தை மாற்றி கொள்ள வேண்டிய காலகட்டத்தில் இருக்கிறது பாஜக.