வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு:  ராமதாஸ் – சி.வி. சண்முகம் கோரிக்கையை நிறைவேற்றும் முனைப்பில் முதல்வர்!

வன்னியர் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கைகளில் சிலவற்றை தொடர்ந்து  நிறைவேற்றி வருகிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இது அந்த சமூக மக்கள் மத்தியில் அவருக்கு நல்ல மதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

வன்னியர் சமூகத்தின் மூத்த தலைவராக அறியப்பட்ட ராமசாமி படையாட்சியார் பிறந்தநாளை அரசு விழாவாக அறிவித்தது, அவரது உருவப்படத்தை சட்டமன்றத்தில் திறந்து வைத்தது, அவரது மணிமண்டபம் திறப்பு போன்றவை அதில் முக்கிய அம்சங்கள் ஆகும்.

அத்துடன், வன்னியர் சமூகத்தின் பெரும் செல்வந்தர்களால் பல ஆண்டுகளுக்கு முன்பு சமூக நலனுக்காக தானமாக வழங்கப்பட்ட பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை ஒருங்கிணைத்து, வன்னிய குல ஷத்ரியர் நல வாரியம் அமைத்ததும் வன்னியர் சமூகத்தின் நீண்டநாள் கோரிக்கையாகும்.

இந்நிலையில், தமிழக அரசு சார்பில், ராமசாமி படையாட்சியாருக்கு கடலூரில் அமைக்கப்பட்ட மணிமண்டபத்தை நேற்று திறந்து வைத்து, அவரது கடந்த கால வரலாற்றை பெருமை பொங்க பேசினார் முதல்வர்.

குறிப்பாக, இருப்புப்பாதை திட்டம், அரசு பொது மருத்துவமனை, பேருந்து நிலையம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் ஆகியவற்றை அமைக்க, தமக்கு சொந்தமான பல ஏக்கர் நிலத்தை ராமசாமி படையாட்சியார் தானமாக வழங்கியதை நினைவு கூர்ந்தார்.

அதேபோல், 1952 ம் ஆண்டு நடந்த பொது தேர்தலில், கட்சி தொடங்கிய சில மாதங்களிலேயே 19  எம்.எல்.ஏ க்களையும்,  4 எம்.பி க்களையும் அவர் பெற்றது குறித்தும் பேசினார்.

அத்துடன் நிறுத்தாமல், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர், தம்மிடம் முக்கிய கோரிக்கை ஒன்றை வைத்துள்ளனர். அந்த கோரிக்கை அரசின் பரிசீலனையில் உள்ளது என்று முடித்தார்.

வன்னியர்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் பலவற்றை முதல்வர் பழனிசாமி  நிறைவேற்றியதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் பங்கு இன்றியமையாதது.

இந்நிலையில், வன்னியர் சமூகத்தின் நீண்டநாள் நிறைவேறாத கோரிக்கைகளில் ஒன்று, மிகவும் பிரடுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில்,  வன்னியர்களுக்கான தனி உள்ஒதுக்கீடு.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், இதை மனதில் வைத்துதான், திமுக ஆட்சிக்கு வந்தால், வன்னியர்களுக்கு தனி உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிக்கை வெளியிட்டார் திமுக தலைவர் ஸ்டாலின்.

இதற்கு பதில் அளித்த பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், வன்னியர்களுக்கான தனி உள் ஒதுக்கீட்டை வென்றெடுக்கும் சக்தி பாமகவுக்கு உள்ளது. அதற்கு, திமுகவின் தயவு தேவை இல்லை என்ற ரீதியில் பதில் அளித்து இருந்தார்.

இதைத்தான், டாக்டர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ், அமைச்சர் சி.வி.சண்முகம் ஆகியோர், தம்மிடம் ஒரு கோரிக்கை வைத்துள்ளதாகவும், அது அரசின் பரிசீலனையில் உள்ளதாகவும் முதல்வர் பழனிசாமி கூறியதாக சொல்லப்படுகிறது.