அதிமுகவை இயக்குவது யார்? துக்ளக் குருமூர்த்தி பேச்சின் பொருள் என்ன?

சென்னையில் நேற்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில், தினகரன் குடும்பம் அதிமுகவை பாடாய் படுத்தியது அனைவருக்கும் தெரியும், அதிமுக யாருக்கும் அடிமை அல்ல என்று பேசி இருந்தார் முதல்வர் எடப்பாடி.

அதே சமயம், நேற்று இரவு திருச்சியில் நடந்த துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய ஆடிட்டர் குருமூர்த்தி, நான் சொல்லித்தான் ஜெயலலிதா சமாதியில் பன்னீர்செல்வம் அமர்ந்து தர்மயுத்தம் நடத்தினார், பிரிந்து கிடந்த அதிமுகவை நான்தான் ஒருங்கிணைத்தேன் என்றும் கூறி உள்ளார்.

ஜெயலலிதா இறந்த பின்னர், அதிமுக பொது செயலாளர் மற்றும் முதல்வர் பதவியில் அமர சசிகலா எடுத்த முயற்சியை, பன்னீர்செல்வத்தை பயன்படுத்தி, பாஜக தடுக்க முயன்றதாக கூறப்பட்டது.

ஆனால், அதையும் மீறி, அதிமுக எம்.எல்.ஏ க்களை கூவத்தூர் ரிசார்ட்டில் தங்கவைத்து, பாஜகவின் முயற்சியை முறியடித்தார் சசிகலா. அப்போது, அந்த எம்.எல்.ஏ க்களை, தங்கள் பக்கம் இழுக்க பன்னீர்செல்வம் மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்காமல் போனது.

அதன் காரணமாகவே, சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு உடனடியாக வழங்கப்பட்டு, சசிகலா சிறையில் அடைக்கப்பட்டார் என்றும் அப்போது ஊடகங்களில் பரபரப்பாக செய்திகள் வெளியாயின.

ஆனாலும், பாஜகவின் நோக்கம் நிறைவேற முடியாமல் தடுக்கும் வகையில், எடப்பாடியை முதல்வராக்கிவிட்டு சிறை சென்றார் சசிகலா.

அதனால், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத பன்னீர்செல்வம், தனி அணியாக இயங்கினார். பின்னர், வேறு வழியின்றி அதிமுகவில் மீண்டும் ஐக்கியம் ஆகி, துணை முதல்வர் ஆனார்.

இந்த தகவல்கள் அவ்வப்போது ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டாலும், இதை ஆதாரப்பூர்வமாக யாராலும் நிரூபிக்க முடியவில்லை.

ஆனால், இதெல்லாம் முடிந்து சிலகாலம் பின்னர், திருச்சியில் நேற்று நடந்த துக்ளக் ஆண்டு விழாவில், அதன் ஆசிரியர் குருமூர்த்தி பேசும்போது, பன்னீர்செல்வத்தை தர்மயுத்தம் நடத்தசொன்னதும், பிரிந்து கிடந்த அதிமுகவை ஒருங்கிணைத்ததும் நான்தான் என்று கூறி உள்ளார்.

இதன்மூலம் அதிமுகவை இயக்குவது யார்? என்று சொல்லாமல் சொல்லியுள்ளார் அவர்.

முன்னதாக நேற்று சென்னையில் நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக யாருக்கும் அடிமை இல்லை என்று முதல்வர் பழனிசாமி பேசினார். அதன் தொடர்ச்சியாக துக்ளக் குருமூர்த்தி நேற்று இரவு இதை தெரிவித்துள்ளார்.