தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் துணிச்சலாக வாழ்ந்தவர் ராமசாமி படையாட்சியார்: முதல்வர் எடப்பாடி புகழாரம்!

இறுதிவரை தன்மானத்தை விட்டுக்கொடுக்காமல் துணிச்சலுடன் வாழ்ந்தவர் ராமசாமி படையாட்சியார் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சுதந்திரப்போராட்ட வீரரும்,, முன்னாள் அமைச்சருமான மறைந்த ராமசாமி படையாட்சியாருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடியே   15 லட்சம் செலவில் கடலூரில் மணிமண்டபம் கட்டப்பட்டுள்ளது.

இதனை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார். மேலும் ராமசாமி படையாட்சியாரின் வெண்கல திருவுருவ சிலை மற்றும் நூலகத்தையும் அவர் திறந்து வைத்தார்.

விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் சி.வி.சண்முகம், எம்.சி.சம்பத், கே.பி.அன்பழகன், துரைகண்ணு, கே.சி.வீரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பின்னர் மணிமண்டபத்தில் உள்ள ராமசாமி படையாட்சியாரின் முழு உருவ சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, தன்மானத்தை விட்டுக் கொடுக்காமல் துணிச்சலாக இருந்தவர் ராமசாமி படையாட்சியார் என்று கூறினார்.

மேலும்,  மக்களை மனிதநேயத்துடன் அணுகியவர், வாழும் போது வரலாறாக வாழ்ந்தவர், ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் ராமசாமி படையாட்சியார் என்றும் புகழாரம் சூட்டினார்.

கடலூரில் இருப்புப் பாதை மற்றும் மருத்துவமனை அமைக்க தமது பல ஏக்கர்  நிலத்தை வழங்கியவர் ராமசாமி படையாட்சியார் என்றும் முதலமைச்சர் கூறினார்.

சுதந்திர இந்தியாவில் முதல் தேர்தல் நடந்த 1952 ம் ஆண்டு வாக்கில் உழவர் உழைப்பாளர் கட்சியை தொடங்கினார். அந்த தேர்தலில் 19 சட்டமன்ற தொகுதிகளிலும்,  4 நாடாளுமன்ற தொகுதிகளிலும் அந்த கட்சி வெற்றி பெற்றது.

அந்த தேர்தலில், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வென்ற போதும், ஆட்சி அமைக்க போதிய பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதையடுத்து, உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் மாணிக்கவேல் நாயக்கர் தலைமையிலான பொதுநல கட்சியின் ஆதரவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தது. ராஜாஜி முதல்வரானார்.

ராஜாஜி முதல்வராக இருந்தபோது, குலக்கல்வி தொடர்பாக எழுந்த பிரச்சினையில், உழவர் உழைப்பாளர் கட்சியின் ஜெயங்கொண்டம் தொகுதி எம்.எல்.ஏ கொடுக்கூர் விஸ்வநாதன் ஆற்றிய உருக்கமான உரையால், அந்த தீர்மானம் தோல்வி அடைந்தது. அதனால், முதல்வராக இருந்த ராஜாஜி தமது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.

பின்னர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு, கல்விக்கட்டணம் ரத்து, பள்ளிகளில் இலவச மதிய உணவு திட்டம்  உள்ளிட்ட நிபந்தனைகளை முன்வைத்து, காங்கிரசில் தமது கட்சியை இணைத்தார் ராமசாமி படையாட்சியார்.

அப்போது, காமராஜர் தலைமையில் அரசு அமைந்தது, அதில் ராமசாமி படையாட்சியார் அமைச்சர் ஆனார். தொடர்ந்து காங்கிரஸ் கட்சியிலேயே இருந்து வந்த படையாட்சியார் 1992 ம் ஆண்டு மறைந்தார்.

கடலூரில் பெரும் நிலச்சுவான்தார் குடும்பத்தில் பிறந்து, சுதந்திரப் போராட்ட வீரராக வாழ்க்கையை தொடங்கிய ராமசாமி படையாட்சியார், வன்னியர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் தலைவராக இன்றும் நினைவுகூரப்படுகிறார்.