மகாராஷ்டிரா பதவிப்பிரமாணத்திற்கு எதிரான வழக்கு: பெரும்பான்மை வாக்கெடுப்பு குறித்து உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு!

மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர பட்னாவிஸுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் சார்பாக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது.

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பின் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

அதையடுத்து, சிவசேனா, காங்கிரஸ், என்சிபி ஆகிய கட்சிகளின் கூட்டணி அமைத்து, ஆட்சி அமைக்கும் முனைப்பில் இறங்கின.

ஆனால், திடீர் திருப்பமாக, தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும், என்சிபியை சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர்.

பெரும்பான்மை எம்.எல்.ஏ க்களை வைத்துள்ள சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கூட்டணியை  ஆளுநர் கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. வெறும் , 105 எம்எல்ஏக்கள் மட்டுமே வைத்திருந்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைத்தார்.

இதையடுத்து, ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா,என்சிபி, காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர், குடியரசுத் தலைவர் ஆட்சியை ஆளுநர் நீக்கியது தொடர்பான கடிதங்கள்,  தேவேந்திர பட்னாவிஸ்,  அஜித் பவார் அளித்த எம்எல்ஏ ஆதரவுக் கடிதங்களை இன்று தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

அதையடுத்து, குடியரசுத் தலைவர் ஆட்சியை விலக்கியது தொடர்பாக ஆளுநர் அனுப்பிய கடிதம், பெரும்பான்மை எம்எல்ஏக்கள் ஆதரவு இருப்பதாக அஜித் பவார் அளித்த கடிதம், பட்னாவிஸ் ஆளுநரிடம் அளித்த கடிதம் ஆகியவை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டன.

இன்று, மத்திய அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் துஷார் மேத்தா, பாஜகவுக்கு 170 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. என்சிபி கட்சியில் இருந்து 54 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது. இரண்டு, மூன்று  நாட்கள் ஆளுநர் தனது பதிலைத் தெரிவிக்க அவகாசம் அளிக்க வேண்டும் என்றார்.

மேலும், பெரும்பான்மை இருப்பதாக எந்தக் கட்சி கடிதம் அளிக்கிறதோ அந்தக் கட்சியை அழைப்பதுதான் ஆளுநரிடம் கடமை. அதன்படிதான் கடந்த 23-ம் தேதி ஆளுநர் பட்னாவிஸை அழைத்தார்.

எந்தெந்தக் கட்சிக்கு எத்தனை எம்எல்ஏக்கள் இருக்கிறார்கள் என்று வரிசையாக நிற்கவைத்து அவர்களை விசாரணை செய்வது ஆளுநர் பணியல்ல.

24  மணிநேரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட முடியுமா என்பதுதான் இப்போதைய கேள்வி. மட்டும்தான்.

கடிதத்தில் இருக்கும் உண்மை நிலவரங்கள், சூழல் ஆகியவற்றின் அடிப்படையில்தான் மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டது என்றும் தெரிவித்தார்.

அஜித் பவார் தரப்பில் ஆஜராகிய வழக்கறிஞர் மணிந்தர் சிங்கும், ஆட்சி அமைக்க  பட்னாவிஸை அழைக்க ஆளுநருக்கு உரிமை இருக்கிறது என்றார்.

சிவசேனா தரப்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், மூன்று  கட்சிகளின் சார்பில் முதல்வர் வேட்பாளராக உத்தவ் தாக்கரேதான் என்று பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது என்றார்.

மேலும், மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிகாலை 5.27மணிக்கு நீக்கிவிட்டு, 8 மணிக்கு முதல்வராக பட்னாவிஸ் பதவி ஏற்கும் அளவுக்கு தேசிய அளவில் அவசரநிலை என்ன இருக்கிறது?

குடியரசுத் தலைவர் ஆட்சி விலக்கப்பட்டதில் ஒருவிதமான பாரபட்சம் இருக்கிறது. மகாராஷ்டிராவில் புதிய அரசு அமைக்கப்பட்டது போன்று வரலாற்றில் எப்போதும் நடந்தது இல்லை.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சிகளுக்கு 154 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது என்று நாங்கள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்துவிட்டோம். பாஜகவுக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்றால்,  24  மணிநேரத்தில் அவர்கள் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடுங்கள்.

பெரும்பான்மையை நிரூபிக்கும்போது அதை வீடியோ மூலம் பதிவு செய்ய வேண்டும். ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது என்றும் கூறினார்.

மகாராஷ்டிரா அரசு சார்பில் ஆஜராகிய வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 24 மணிநேரத்தில் பெரும்பான்மையை நடத்த வேண்டும் என்று நீதிமன்றம் ஆளுநருக்கு உத்தரவிட முடியாது என்றார்.

மேலும், ஆளுநருக்கு அரசியலமைப்பு சட்டத்தின்படி, சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. நாளை பெரும்பான்மை நடத்த உத்தரவிடக்கூடாது. அதற்கு  ஏழு  நாட்கள்வரை ஆளுநர் அவகாசம் எடுக்கலாம் என்றும் வாதம் செய்தார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சஞ்சீவ் கண்ணா, “கடந்த காலங்களில் இதுபோன்ற வழக்குகளில் பெரும்பான்மை வாக்கெடுப்பு 24 மணிநேரத்தில் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. சில வழக்குகளில் மட்டுமே 48 மணிநேரம் வழங்கப்பட்டது எனத் தெரிவித்தார்.

என்சிபி, காங்கிரஸ் சார்பில் ஆஜராகிய மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, என்சிபி கட்சியின் ஒரு எம்எல்ஏவான அஜித் பவாரை வைத்துக்கொண்டு ஆட்சி அமைத்துள்ளது மிக மோசமான மோசடி என்று கூறினார்.

மேலும், இன்று பெரும்பான்மையை நிரூபிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும் நாங்கள் மகிழ்ச்சி அடைவோம். ஆனால்,  இன்று பெரும்பான்மையை நிரூபிக்க பாஜக  ஒத்துக்கொள்ள மாட்டார்கள். 154  எம்எல்ஏக்கள் ஆதரவை நாங்கள் பிரமாணப் பத்திரமாக தாக்கல் செய்துவிட்டோம் என்றார்.

என்சிபி  எம்எல்ஏக்கள் தம்மை, சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தேர்வு அளித்த கடிதத்தைதான் அஜித்பவார் அளித்துள்ளார். என்சிபி எம்.எல்.ஏ க்கள்,  பாஜகவுக்கு ஆதரவு அளிப்பதாகக் கடிதம் அளிக்கவில்லை. இதை ஆளுநர் கடிதம் பெறும் போது ஏன் ஆய்வு செய்யவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

பெரும்பான்மையை நிரூபிக்கும் சோதனைக்கு இருவரும் தயாராக இருக்கிறோம். எதற்காகத் தாமதம் செய்கிறீர்கள்? எந்த என்சிபி எம்எல்ஏயாவது பாஜக கூட்டணியில் சேரப்போகிறோம் எனச் கூறினார்களா? அவர்களிடம் எம்எல்ஏக்கள் கடிதம் இருக்கிறதா?  ஜனநாயகத்தில் பெரும் மோசடி செய்கிறார்கள் எனவும் அவர் வாதிட்டார்.

அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், பெரும்பான்மையை நிரூபிப்பது தொடர்பாக நாளை காலை உத்தரவிடுகிறோம் எனத் தெரிவித்தனர்.