மக்களவை காவலர்கள் பெண்கள் என்றும் பாராமல் எங்களை பிடித்து தள்ளிவிட்டனர்:  காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றச்சாட்டு!

மாகாராஷ்டிரா அரசியல் சூழ்நிலை தொடர்பாக மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் முழக்கமிட்டபோது மக்களவை பாதுகாவலர்கள் எங்களை  பிடித்து  தள்ளிவிட்டனர் என்று கரூர் எம்.பி ஜோதிமணி குற்றம் சாட்டியுள்ளார்,

மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிறகு பாஜக – சிவசேனா கட்சிகள் இடையே அரசு அமைப்பதில் உடன்பாடு எட்டபடாததைத் தொடர்ந்து அங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

இதையடுத்து, காங்கிரஸ், என்சிபி, சிவசேனா கட்சிகள் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கும் முனைப்பில் இருந்தன,

இந்நிலையில்,, மகாராஷ்டிராவில் கடந்த சனிக்கிழமை அதிகாலை அமலில் இருந்த குடியரசு தலைவர் ஆட்சி விலக்கப்பட்டு பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.

அவருடன் பாஜகவுக்கு ஆதரவளித்த என்.சி.பி கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் துணை முதல்வராக பதவியேற்றார்.

என்.சி.பி தலைவர் சரத் பவார், பாஜகவுக்கு ஆதரவு அளித்த அஜித் பவாரை கட்சியிலிருந்தும் கட்சியின் சட்டமன்றக் குழுதலைவர் பதவியிலிருந்து நீக்கினார்.

அனைத்து எம்.எல்.ஏ-க்களும் தனது பக்கம் இருப்பதாகவும் அதனால் பாஜக பெரும்பான்மை இல்லாமல் அரசு அமைத்துள்ளதாகக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து, மகாராஷ்டிராவில் பாஜக பெரும்பான்மை இல்லாமல் அரசு அமைத்துள்ளதாகக் கூறி, சிவசேனா – என்.சி.பி – காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் கூட்டாக வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது.

இந்நிலையில், பாஜக மகாராஷ்டிராவில் சட்டத்துக்குப் புறம்பாக பெரும்பான்மை இல்லாமல் அரசு அமைத்தது தொடர்பாக, காங்கிரஸ் எம்.பி-க்கள் நேற்று  நடைபெற்ற மக்களவை கூட்டத்தில் சபாநாயகர் இருக்கைக்கு அருகே சென்று அமளியில் ஈடுபட்டனர்.

அப்போது, மக்களவைப் பாதுகாவலர்கள் சாபநாயகர் இருக்கைக்கு அருகில் கூடி முழக்கமிட்ட எம்.பி.க்களை அப்புறப்படுத்தினர். அதில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் தொகுதி எம்.பி ஜோதிமணியையும் எ.பி. ரம்யா ஹரிதாஸையும் பாதுகாவலர்கள் பிடித்து இழுத்து தள்ளியதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து கரூர் எம்.பி. ஜோதிமணி ஊடகங்களிடம் கூறுகையில், “மகாராஷ்டிராவில் அரசியல் சூழல் தொடர்பாக, நாங்கள் முழக்கமிட்டபோது, என்னையும் சக எம்.பி.யான ரம்யா ஹரிதாஸையும் பாதுகாவலர்கள் பிடித்து தள்ளினார்கள்” என்று கூறினார்.

காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.பி.க்களை மக்களவையில் பாதுகாவலர்கள் பிடித்து தள்ளியது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகர் ஓ.பிர்லாவிடம் புகார் அளித்துள்ளார்.