மகாராஷ்டிரா வழக்கில் நாளை முடிவு: பட்நாவிசுக்கு ஆதரவளித்த எம்எல்ஏக்களின் கடிதங்களை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

மகாராஷ்டிராவில் பட்நாவிஸ் அரசமைக்க ஆதரவு தெரிவித்த எம்.எல்.ஏக்களின் கடிதங்களை, தாக்கல் செய்ய உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் பட்நாவிசுக்கு பதவி பிராமணம் செய்து வைத்த ஆளுநருக்கு எதிராக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் சார்பில் தொடரப்பட்ட வழக்கு, உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், மத்திய அரசு, மகாராஷ்டிரா அரசு, முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், ஆளுநரிடம் தேவேந்திர பட்னாவிசுக்கு ஆதரவளித்த  எம்எல்ஏக்களின் கடிதங்களையும் நாளை காலை தாக்கல் செய்ய வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலுக்குப் பின் பாஜகவுக்கும், சிவசேனாவுக்கும் இடையே முதல்வர் பதவியைப் பகிர்ந்து கொள்வதில் மோதல் வெடித்ததால், கூட்டணி உடைந்தது.

எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாததையடுத்து அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ்  கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சி செய்தது.

இந்த நிலையில், என்சிபி மூத்த தலைவர் அஜித் பவார் துணை முதல்வராகவும், தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகவும் பதவியேற்றனர்.

அதேசமயம்,  சிவசேனா, காங்கிரஸ், என்சிபி கட்சிகள்  சேர்ந்து பெரும்பான்மைக்கு அதிகமான எம்.எல்.ஏக்களை பெற்றிருந்தும், ஆளுநர் அவர்களை  கோஷியாரி ஆட்சி அமைக்க அழைக்கவில்லை.

ஆளுநர் கோஷியாரின் இந்தச் செயலுக்கு எதிராகவும், உடனடியாக பெரும்பான்மையை நிரூபிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் சிவசேனா, என்சிபி,  காங்கிரஸ் சார்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் என்.வி.ரமணா, அசோக் பூஷன், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் முன் இன்று காலை விசாரணைக்கு வந்தது.

அப்போது,  மகாராஷ்டிரா அரசு சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினார்கள்.

சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

கபில்சிபல் வாதிடும்போது, ” தேர்தலுக்கு முன் அமைந்த பாஜக-சிவசேனா கூட்டணி முறிந்துவிட்டது, அவர்களால் ஆட்சி அமைக்க முடியவில்லை.

தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியை சிவசேனா, என்சிபி, காங்கிரஸ் இணைந்து அமைத்துள்ளன. இந்த மூன்று கட்சிகளிடம் பெரும்பான்மைக்கான எம்எல்ஏக்கள் இருக்கின்றனர்.

ஆனால்,  எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி மாநிலத்தில் நிலவிய குடியரசுத் தலைவர் ஆட்சியை மத்திய அமைச்சரவைக் கூட்டம் கூட்டாமல் நீக்கியுள்ளனர். இது மிகவும் வினோதமான செயல்.

மேலும், முதல்வராக தேவேந்திர பட்னாவிஸும், துணை முதல்வராக அஜித் பவாரும் பதவி ஏற்றுள்ளார்கள். எந்த அடிப்படையில் இவர்கள் பதவி ஏற்றார்கள், எந்த ஆவணத்தை அடிப்படையாக வைத்து ஆளுநர் இவர்களுக்குப் பதவிப்பிரமாணம் செய்துவைத்தார்.

ஆளுநரின் செயல்கள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது, ஒரு தலைப்பட்சமானது. எனவே, மகாராஷ்டிராவில் சட்டப்பேரவையில் இன்றே பெரும்பான்மை நிரூபிக்க உத்தரவிட வேண்டும்.

பாஜகவுக்கு பெரும்பான்மை இருந்து அவர்கள் நிரூபித்தால் அவர்கள் ஆட்சி அமைக்கட்டும் என்று கபில்சிபல் தெரிவித்தார்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி வாதிடும்போது,   சரத் பவாரின் என்சிபி கட்சியில் 54 எம்எல்ஏக்கள் இருக்கும் நிலையில் தற்போது அவரிடம் 41 எம்எல்ஏக்கள் ஆதரவு இருக்கிறது.

அதுமட்டுமல்லாமல் அஜித் பவாரை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக நீக்கி உத்தரவு பிறப்பிக்கப்பட்டு அந்த கடிதமும் ஆளுநரிடம் அளிக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மீண்டும் கபில்சிபல் பேசும்போது, சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் நவம்பர் 30ம் தேதிவரை அவகாசம் அளித்துள்ளார். இவ்வளவு கால அவகாசம் அளிப்பது குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும்.

எனவே, தாமதிக்காமல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்றார்.

மகாராஷ்டிரா சார்பில் ஆஜரான  வழக்கறிஞர் முகுல் ரோத்தகி ” விடுமுறை நாளான இன்று இந்த வழக்கை எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனவே, மனுவை ஒத்திவைக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அபிஷேக் சிங்வி வாதிடும்போது,  2018-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் நடந்த இதேபோன்ற வழக்கில், பெரும்பான்மை நிரூபிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

ரகசிய வாக்கெடுப்பு நடத்தக்கூடாது, வெளிப்படையாக நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது அதேபோல இங்கும் வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கூறினார்.

முகுல் ரோத்தகி வாதிடும்போது, ” ஆளுநர் எந்தவிதமான சட்டவிதிகளையும் மீறவில்லை என்பதால்,  இன்று எந்த உத்தரவும் பிறப்பிக்க அவசியம் இல்லை. பெரும்பான்மையை நிரூபிக்க எந்த தேதியையும் நீதிமன்றம் அறிவிக்கத் தேவையில்லை என்றார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  மகாராஷ்டிரா அரசு, மத்திய அரசு,  முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்,  துணை முதல்வர் அஜித் பவார் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.

மேலும், ஆளுநரிடம் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்வர் அஜித் பவார் அளித்த எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதங்கள் , அது தொடர்பான ஆவணங்களையும், குடியரசுத்தலைவர் ஆட்சியை நீக்கக் கோரி ஆளுநர் பரிந்துரை கடிதத்தையும் நாளை காலை தாக்கல் செய்ய வேண்டும். நாளை உத்தரவு பிறப்பிக்கிறோம் என்று மத்திய அரசு வழக்கறிஞர் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு உத்தரவிட்டனர்.