கையில் அதிகாரம் இருப்பதால் எதையும் செய்யக்கூடாது: பாஜகவை விமர்சித்த பிரேமலதா விஜயகாந்த்!

மகாராஷ்டிராவில் பட்னாவிசுக்கு ஆளுநர் பதவிபிரமாணம்  செய்து வைத்த விவகாரம், உச்சநீதிமன்றம் வரை சென்றுள்ளது. இந்த விவகாரத்தை எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன.

தமிழகத்தைப் பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள எந்த கட்சியும், மகாராஷ்டிரா அரசியலை இதுவரை விமர்சிக்கவில்லை.

ஆனால், பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேமுதிக பொருளாளர்  பிரேமலதா விஜயகாந்த், அதுகுறித்து தைரியமாக விமர்சித்துள்ளார்.

மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது என்று கூறினார்.

அவர் மேலும் கூறும்போது, பாலில் நச்சுத்தன்மை இருக்கிறது என்று மத்திய அமைச்சர் கூறியதை, தமிழக பால்வளத்துறை அமைச்சர் மறுத்துள்ளார்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலில் கலப்படம் செய்யக்கூடிய நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மகராஷ்டிராவில் ஒரே இரவில் ஆட்சி அமைத்துள்ளனர். இவ்வளவு அவசர கால கட்டத்தில் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அதிகாரபூர்வமாகவே ஆட்சிக்கு வந்து இருக்கலாம்.

இரவோடு இரவாக ஆட்சி அமைத்துள்ளனர். மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நம் கையில் அதிகாரம் இருக்கிறது என்பதற்காக எதையும் செய்யக்கூடாது.

அதிசயம் அற்புதம் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள்தான் எஜமானர்கள் அவர்கள் தான் தீர்மானிப்பார்கள்.

மக்கள் வருத்தத்தில் இருக்கின்றனர். யார் தங்களுக்கான தலைவர் என்று மக்களுக்கு தெரியும். அவர்களை மக்கள் மிகச் சரியான நேரத்தில் தேர்ந்தெடுப்பார்கள். இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.