முரசொலி மூலப்பத்திரத்தை நீதிமன்றத்தில் திமுக தாக்கல் செய்தாக வேண்டும்:  அன்புமணி ராமதாஸ் பேட்டி!

முரசொலி – பஞ்சமி நிலம் தொடர்பாக திமுக அவதூறு வழக்கு தொடர்ந்தால், நீதிமன்றத்தில் மூலப்பத்திரத்தை தாக்கல் செய்தாக வேண்டும். எனவே, திமுகவின் வழக்கை வரவேற்கிறோம் என்று, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பாமக இளைஞரணி கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது, மாநிலம் முழுவதும் இருந்து ஏராளமான இளைஞர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பேசிய அன்புமணி, “மாற்றம் முன்னேற்றம்” என்ற முழக்கத்தை மீண்டும் கையில் எடுத்தார். ஒவ்வொரு வாக்கு சாவடியிலும் வலிமையான விலைபோகாத ஒரே ஒரு இளைஞர் வேண்டும் என்று அப்போது அவர் கேட்டுக்கொண்டார்.

அதிமுக கூட்டணியில் இருக்கும் நமக்கு, உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்கள் கிடைக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

கூட்டத்திற்கு பின்னர், இளைஞர்களை உற்சாகப்படுத்தும் வகையில், ஒவ்வொரு மாவட்ட நிர்வாகிகளையும் அவர் தனித்தனியே சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி, 2021 லும் அதிமுக ஆட்சி என்ற அதிசயமே நிகழும் என்று கூறினார்.

முரசொலி – பஞ்சமி விவகாரம் தொடர்பாக திமுக வழக்கு தொடர்வதை வரவேற்கிறோம் என்று கூறிய அவர், நீதிமன்றத்திலாவது, முரசொலி தொடர்பான மூலப்பத்திரத்தை திமுக தாக்கல் செய்யும் என நம்புவதாகவும் தெரிவித்தார்.