சுற்றுச்சூழலுக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழக அரசு:  அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி  ராஜ்சத்யன் விளக்கம்!

சுற்றுச்சூழல் சார்ந்த முன்னெடுப்பு நடவடிக்கைகளுக்கு தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாக, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் வி.வி.ஆர். ராஜ்சத்யன் தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் இந்தியா மற்றும் தி நியூஸ் மினிட் இணையதளம் சார்பில், “லெட் மீ பிரீத்” என்ற மாநகரம் சார்ந்த சுற்றுச்சூழல் கருத்தரங்கம்  சென்னையில் நேற்று நடைபெற்றது.

இதில் அதிமுகவை சேர்ந்த ராஜ்சத்யன், திமுகவை சேர்ந்த சரவணன் அண்ணாதுரை, காங்கிரசை சேர்ந்த அமெரிக்கை நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

திமுகவை சேர்ந்த சரவணன் பேசும்போது, நகரமயமாக்கல் மட்டுமே அனைத்து பிரச்சனைகளுக்கும் காரணமல்ல என்றார்.

சென்னை என்பது, ஏற்கனவே தொழில்கள் பெருகி வாழ்க்கை தரம் உயர்ந்த ஒரு பெருநகரம். இவை அனைத்தையும் இனி அப்புறப்படுத்திட முடியாது.

எனவே, இன்றைய சூழலில் செய்யக்கூடிய ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

காங்கிரஸ் சார்பில் பேசிய அமெரிக்கை நாராயணன், பல ஆண்டுகளுக்கு முன்பே சத்தியமூர்த்தி பவனில் மழைநீர் சேகரிப்பு முயற்சிகள் நடைபெற்றதை நினைவுகூர்ந்தார். மேலும்,  சுற்றுச்சூழல் கருத்தியலுக்கு தாமும் உடன்படுவதாக தெரிவித்தார்.

அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு இணை செயலாளர் ராஜ் சத்யன் பேசும்போது,  சுற்றுச்சூழல் மேம்பாட்டிற்கு தமிழக அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருவதாக தெரிவித்தார்.

நீர்மேலாண்மை, மழைநீர் சேகரிப்பு, ஆறு ஏரி குளம் சீரமைப்பு,  நிலத்தடி நீர் சேமிப்பு, குடிமராமத்து, மின்சார வாகன கொள்கை, தொழிற்சாலை மற்றும் வாகனங்களால் ஏற்பட்டுள்ள காற்று மாசு அளவீடு ஆகியவற்றில் தமிழக அரசு முன்னெடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைள் குறித்தும் விளக்கினார்.

மேலும், எந்தெந்த திட்டங்களுக்கு எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது, திட்டங்கள் எந்த அளவிற்கு நடந்து முடிந்துள்ளன, இனி நடக்கவுள்ள பணிகள் என அனைத்தையும் புள்ளிவிவரங்களுடன் தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசு,  சுற்றுச்சூழல் மற்றும் நீரியலுக்கு வழங்கும் முன்னுரிமை, எதிர்காலம் சார்ந்த அக்கறையுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தானே முன்வந்து முழுஆர்வத்துடன் பங்கெடுத்து வருவதையும் அவர் குறிப்பிட்டார்.