உள்ளாட்சி தேர்தல்: உற்சாகத்தில் அதிமுக – சுணக்கத்தில் எதிர்கட்சிகள்!

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்புகள் எந்த நேரத்திலும் வரலாம் என்ற எதிர்பார்ப்பில் அனைத்து கட்சிகளும், விருப்ப மனுக்கள் பெற்று வந்தன.

ஆனால், மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்கள் மறைமுக தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவதற்கான சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்ததால், எதிர்கட்சிகள் சற்று சுணக்கம் அடைந்துள்ளன என்றே கூறப்படுகிறது.

அதிமுகவை பொறுத்தவரை, விக்கிரவாண்டி – நாங்குநேரி இடைத்தேர்தலுக்கு பின்னர், முதல்வர் எடப்பாடி மிகவும் உற்சாகத்தில் இருக்கிறார்.

உள்ளாட்சி தேர்தலையும் வெற்றிகரமாக நடத்தி முடித்து, வெற்றியை கொடுத்து விட்டால், ஜெயலலிதாவை போல அதிமுகவின் பொது செயலாளர் ஆகிவிடலாம் என்று கணக்குப்போட்டு அவர் காய்களை நகர்த்தி வருகிறார்.

ஏற்கனவே, மறைமுகமாக பன்னீர்செல்வத்தின் செல்வாக்குகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ள நிலையில், அமெரிக்க சென்று வந்த அவரை, அமைச்சர் பாண்டியராஜன் மட்டுமே விமான நிலையம் வந்து வரவேற்றார். மற்ற அமைச்சர்கள் யாருமே வரவில்லை.

இந்நிலையில், கிராம பஞ்சாயத்து தொடங்கி மேயர் வரை உள்ள பல இடங்களில், தமது ஆதரவாளர்களுக்கு குறைந்த பட்ச இடங்களையாவது பெற்றுத் தரவேண்டும் என்று கடுமையாக போராடி வருகிறார் பன்னீர்.

ஆனால், உள்ளாட்சி தேர்தலில், முழுக்க முழுக்க தமது ஆதரவாளர்களையே, வெற்றி பெறவைத்து, ஒட்டுமொத்த கட்சியையும் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர நினைக்கிறார் முதல்வர் எடப்பாடி.

இதற்கான பணிகளை, அந்தந்த மாவட்ட அமைச்சர்களிடமே ஒப்படைத்து விட்டார் அவர். இது பன்னீர் தரப்பை ரொம்பவே அதிருப்தி அடைய வைத்துள்ளது.

மறைமுக தேர்தல் என்பதால், நிச்சயம் சாதிக்க முடியும் என்பது, முதல்வரின் கணக்காக உள்ளது.

ஆனால், எதிர்கட்சிகளை பொறுத்தவரை, இந்த உள்ளாட்சி தேர்தல் வராமல் இருப்பதே நல்லது என்ற என்ன ஓட்டத்தில் உள்ளன.

அதிமுகவின் அத்தனை அஸ்திரங்களையும் எதிர்கொள்ளும் திறன் திமுகவிற்கு இருந்தாலும், தண்ணீராக பாயும் பணத்திற்கு முன், தங்களால் எப்படி ஈடுகொடுக்க முடியும் என்ற கேள்வி உள்ளது.

மறுபக்கம், அடுத்த சட்டமன்ற தேர்தல், இன்னும் ஒன்றரை ஆண்டுக்குள் வர இருப்பதால், அதற்கான பணத்தேவையையும் சமாளிக்க வேண்டிய நிலை உள்ளது.

இதனால், உள்ளாட்சி தேர்தலை ஆளும் அதிமுக உற்சாகமாக எதிர்கொள்ளும் நிலையில் இருந்தாலும், எதிர்கட்சியான திமுக சுனக்கமாகவே உள்ளது என்றே சொல்லப்படுகிறது.