முரசொலி – பஞ்சமி விவகாரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.1 கோடி கேட்டு அவதூறு வழக்கு:  ராமதாஸ்- சீனிவாசனுக்கு திமுக  நோட்டீஸ்!

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், புகார் அளித்த சீனிவாசன் ஆகியோர்  48 மணி நேரத்தில் மன்னிப்பு கேட்காவிட்டால் அவதூறு வழக்கு தொடருவோம் என திமுக  நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அசுரன் படத்தை பார்த்த திமுக தலைவர் ஸ்டாலின், பஞ்சமி நில மீட்பு குறித்த அந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்தார். இதற்கு பதில் அளித்த பாமக நிறுவனர் ராமதாஸ், முரசொலிக்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலத்தை உரியவரிடம் ஒப்படைத்தால் பாராட்டுக்கள் என்றார்.

இந்த விவகாரம், காரசாரமாக சூடுபிடித்திருந்த வேளையில், முரசொலி நிலம், பஞ்சமி நிலமா? என விசாரணை செய்ய வலியுறுத்தி, பாஜக மாநில செயலாளர் சீனிவாசன், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் மனு அளித்தார்.

அந்த மனுவின் அடிப்படையில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம்,  ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால், முரசொலி அறங்காவலர் குழு உறுப்பினர் ஆலந்தூர் பாரதி, ஆஜரானார். மனு அளித்த சீனிவாசனும் ஆஜரானார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆலந்தூர் பாரதி, இந்த விவகாரத்தை முதலில் கிளப்பிய பாமக நிறுவனர் ராமதாஸ், ஆணையத்தில் புகார் அளித்த சீனிவாசன் இருவர்மீது அவதூறு வழக்கு தொடரப்படும் என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, முரசொலி அறங்காவலரும், தி.மு.க அமைப்புச் செயலாளருமான ஆர்.எஸ்.பாரதி சார்பாக வழக்கறிஞர் நீலகண்டன் இன்று நோட்டீஸ் அனுப்பினார்.

அதில், ராமதாஸ், முரசொலி இடம் குறித்து, தான் பதிவிட்ட ட்விட்டர் பதிவுகளை, நோட்டீஸ் கிடைத்த 24 மணி நேரத்தில் நீக்கிவிடவேண்டும் என்றும், 48 மணி நேரத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரவேண்டும் என்றும், வருங்காலத்தில் இது போன்ற அவதூறான பதிவுகளைப் பதிவிடக்கூடாது என்றும் நோட்டீஸில் கோரப்பட்டுள்ளது.

தவறும் பட்சத்தில், முரசொலி அறக்கட்டளை சார்பாக ஆர்.எஸ்.பாரதியால் ரூபாய் ஒரு கோடி நஷ்ட ஈடு கேட்டு சிவில் நீதிமன்றத்தில் ராமதாஸ் மீது வழக்கு தொடுக்கப்படும் எனவும், அவதூறு குற்றத்திற்காக குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் எனவும், வழக்கறிஞர் நீலகண்டன் அனுப்பிய நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேப்போன்று பாஜக சீனிவாசனுக்கும் இதே விபரங்களுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.