ஒரே நாளில் தேசிய அளவில் பிரபலமான அஜித்பவார்? பாஜக வளைத்தது எப்படி?

 மகாராஷ்டிராவில் அன்று முதல் இன்று வரை அசைக்க முடியாத தலைவராக வலம் வந்து கொண்டிருப்பவர் சரத்பவார்.

மகாராஷ்டிராவில் எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கென்று, ஒரு கணிசமான இடங்கள் கண்டிப்பாக கிடைத்தே தீரும்.

தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்த சரத்பவார் பின்னர் தேசியவாத காங்கிரஸ் என்று தனிக்கட்சி தொடங்கி நடத்தி வருகிறார்.

மகாராஷ்டிராவின் பெரும்பாலான மாவட்டங்களில் அடர்த்தியாக வாழும் பெரும்பான்மை சமூகத்தில் இருந்து வந்தவர் என்பதால், அந்த சமூகத்தின் பெரும்பாலான வாக்குகள் சரத்பவாருக்கே கிடைக்கும்.

அம்மாநிலத்தில், காங்கிரஸ், சிவசேனா, பாஜக என எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், சரத்பவாரின் செல்வாக்கை இதுவரை யாராலும் தகர்க்க முடியவில்லை.

ஆனால், அவரது அண்ணன் மகனான அஜித் பவாரே, இன்று சரத் பவாருக்கு எதிராக திரும்பியது, அக்கட்சிக்கு பெரிய அளவில் சறுக்கல் இல்லை என்றாலும், சற்று நெருக்கடிதான்.

சர்க்கரை ஆலைத்தொழிலில் கொடிகட்டிப்பறந்தது பவார் குடும்பம். அந்த செல்வாக்கின் மூலம் அரசியலுக்கு வந்த சரத்பவார், தொடக்கத்தில் மாநில அரசியலில் கவனம் செலுத்தினாலும், பின்னாளில் தேசிய அரசியலில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்.

ஆண் வாரிசு இல்லாத சரத்பவார், தமது அண்ணன் மகனான அஜித்பவாரை அரசியலுக்கு கொண்டு வந்தார். அஜித்பவாரின் நடவடிக்கைகள் சரத்பவாருக்கு வலிமை சேர்க்கும் வகையில் இருந்ததால், கட்சியில், சரத் பவாருக்கு அடுத்த நிலையில் கோலோச்சினார் அஜித்பவர்.

மகாராஷ்டிரா அமைச்சரவையில் என்சிபி பங்கேற்ற போதெல்லாம், அஜித் பவாருக்கு முக்கிய பொறுப்புக்கள் வழங்கப்பட்டன. காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் துணை முதலமைச்சராகவும் அவர் இருந்தார்.

இந்நிலையில் 2009 நாடாளுமன்ற தேர்தலின்போது சரத்பவார் தனது மகள் சுப்ரியா சூலேவை தேர்தல் களத்தில் இறக்கினார். இதனால், அஜித் பவார் தரப்பு சற்று அதிர்ச்சியடைந்தது.

எனினும், சுப்ரியா சுலே, தேசிய அரசியலில் கவனம் செலுத்தியதால், அஜித்பவாருக்கு பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

ஆனாலும், சரத் பவார், தனது பெரிய மருமகன் ரோகித் பவாரை கட்சியில் அறிமுகப்படுத்தினார். இது, அஜித் பவாருக்கு அதிருப்தியை தந்தது.

2012 ம் ஆண்டு அசோக் சவானின், காங்கிரஸ் அமைச்சரவையில்,  நீர் ஆதாரத்துறை அமைச்சராக பதவி வகித்த அஜித்பவார், பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

அதன் காரணமாக அஜித்பவாரை, பதவி விலக வேண்டும் என்று அசோக் சவான் வலியுறுத்தினர். அஜித் பவார் முரண்டு பிடிக்கவே, ஆட்சி கவிழும் நிலை ஏற்பட்டது. பின்னர் சரத்பவார் தலையிட்டு, சவான் அரசை காப்பாற்றினார்.

மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பல்லாயிரம் கோடி அளவிற்கு பண மோசடி செய்ததாக, அஜித் பவார் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இதையடுத்து, சரத்பவார் வற்புறுத்தவே அஜித் பவார், தமது  எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.

2013ம் ஆண்டில் மகாராஷ்டிராவில், கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவியபோது, அனைவரும் அணைக்கு சென்று சிறுநீர் கழித்து அதை நிரப்புங்கள் என்று அஜித்பவார் கருத்து தெரிவித்திருந்தார். அஜித் பவாரின் இந்த கருத்து பூதாகரமாக பல இடங்களில் வெடித்தது.

பின்னர் அந்த கருத்துக்கு மன்னிப்பும் அவர் கேட்டார். ஆனாலும், 2014 நடைபெற்ற தேர்தலில், பாரதிய ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த விசயத்தை பூதாகாரமாக பெரிதாக்கி தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தின.

எனினும், என்சிபியில் அவருக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட்டே வந்தது. ஆனாலும், அஜித்பவார் மீதுள்ள கூட்டுறவு வங்கி முறைகேடு, நீர் ஆதாரத்துறை ஊழல் போன்றவற்றை, பாஜக தனக்கு சாதகமாக பயன்படுத்தி, அஜித்பவாரை வளைத்துவிட்டது என்று சொல்லப்படுகிறது.

ஆளுநர் மாளிகை வரை வாருங்கள் என்று அஜித்பவார் எங்களை அழைத்ததால் சென்றோம். ஆனால் அங்கு நடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தோம் என்று, அவருடன் சென்று திரும்பிய ஆறு எம்.எல்.ஏக்கள் கூறி உள்ளனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சியில் சட்டப்பேரவை குழு தலைவர் பதவியில் இருந்து அஜித்பவார் நீக்கப்பட்டு, ஜெயந்த் பட்டீல் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் சரத் பவார் அறிவித்தார்.

அஜித்பவாருடன் செல்லும் எல்.எல்.ஏ க்கள் மீது கட்சி தாவல் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சரத்பவார் எச்சரித்துள்ளார்.

1992  முதல் சரத்பவாருக்கு வலது கரமாக இருந்து வந்த அஜித்பவார், ஒரே நாளில் தமது நடவடிக்கைகளால் தேசிய அளவில் பிரபலம் அடைந்து விட்டார்.