உள்ளாட்சியில் மறைமுக தேர்தல்: அதிமுகவை சமாளிக்க திணறும் திமுக!

எதிர் கட்சிகளை தமது கேள்வி மற்றும் எதிர்ப்பின் மூலம் திணற வைப்பவர் கலைஞர். அதேசமயம், திமுகவுக்கு நெருக்கடி வந்தால், அதை சாமர்த்தியமாக சமாளித்து மீண்டு வரும் திறனும் அவருக்கு இருந்தது.

ஆனால், தற்போதய திமுக தலைவர் ஸ்டாலின், எதிர்கட்சிகளின் கேள்விகளில் சிக்கிக்கொண்டு, அதில் இருந்து வெளிவருவதற்கே போராட வேண்டிய நிலையில் இருக்கிறார்.

மிசா கைது விவகாரம், முரசொலி-பஞ்சமி விவகாரங்கள் திமுக தலைவர் ஸ்டாலினை மிகவும் டென்ஷனாக்கி விட்டது என்றே கூறுகின்றனர்.

அந்த வரிசையில் தற்போது, ஸ்டாலினை டெண்ஷனாக்கும் விவகாரம், மேயர், நகரமன்ற தலைவர், பேரூராட்சி தலைவரை கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க வகைசெய்யும் தமிழக அரசின் சட்டம்.

2006 ம் ஆண்டு திமுக ஆட்சிக்கு வந்ததும், ஏற்கனவே இருந்த உள்ளாட்சி தேர்தல் நடைமுறையை மாற்றி, கவுன்சிலர்களே மேயர், நகரமன்ற தலைவர் போன்றவர்களை தேர்ந்தெடுக்கும் முறை கொண்டுவரப்பட்டது.

இதற்கு, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு எதிர்ப்புகளை தெரிவித்த போதும், திமுக அரசு அதை கண்டுகொள்ளவில்லை.

ஆனால், 2011 ம் ஆண்டு அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, முதல்வர் ஜெயலலிதா, மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்களை மக்களே நேரடியாக தேர்ந்தெடுக்கும் முறையை கொண்டு வந்தார்.

அதன்பிறகு, கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த, உள்ளாட்சி தேர்தல், விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில், நேரடி தேர்தலுக்கு பதில், மறைமுக தேர்தல் நடத்துவதற்கு வகை செய்யும் சட்டத்தை, தமிழக அரசு பிறப்பித்துள்ளது.

இதற்கு, திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், இன்று புதிதாக உதயமாகும் தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஸ்டாலின் கொண்டு வந்த மறைமுக தேர்தலை ஸ்டாலினே எதிர்ப்பது விந்தை என்று கூறி உள்ளார்.

1996  ம் ஆண்டு வரை உள்ளாட்சியில் மறைமுக தேர்தல்தான் இருந்தது. அதை நேரடி தேர்தலாக மாற்றி, அதன் பின்னர் மறைமுக தேர்தலாக மாற்றியதும் திமுகதான்.

மறைமுக தேர்தலை ஸ்டாலின் கொண்டு வந்தால் சரியானது. அதிமுக கொண்டு வந்தால் தவறானது என்று கூறுவது இரட்டை வேடம் அல்லவா? என்றும் எடப்பாடி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதற்கு திமுக தரப்பில் இருந்து நேரடியாக எந்த பதிலும் இல்லை. ஆட்சியாளர்கள், தங்களது சாதக பாதகங்களுக்கு ஏற்ப, நேரடி தேர்தலையும், மறைமுக தேர்தலையும் மாறி மாறி கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை.