எத்தனையோ பாவங்களின் சூத்ரதாரி முதல்வர் பழனிசாமி : துரைமுருகன் அறிக்கை!

அரசியல் மேடைகளில் பாவ புண்ணியங்களை பற்றியும் சில பேச்சுக்கள் வரத்தான் செய்கின்றன. அதுவும், எடப்பாடி பேசும் மேடைகளில், அம்மாவின் ஆன்மா மன்னிக்காது, பாவ மன்னிப்பு கிடைக்காது என்றெல்லாம் பேசி வருகிறார்.

நாங்குநேரி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர், திமுக போட்ட பொய் வழக்கு காரணமாகவே, மன உளைச்சலில் ஜெயலலிதா இறந்தார். அதனால், அவரின் ஆன்மா திமுகவை சும்மா விடாது என்று பேசினார்.

இதற்கு பதில் அளித்து பேசிய திமுக, சுப்ரமணியசாமி தொடுத்த வழக்கில்தான், ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டது என்பதை தெளிவு படுத்தியது.

முதல்வர் எடப்பாடி இதை எல்லாம் தெரிந்துதான் பேசுகிறாரா? அல்லது இதுபோல எதையாவது சொல்லி திசை திருப்புகிறாரா? என்பது தெரியவில்லை.

இந்நிலையில், தென்காசி மாவட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதல்வர், ஆட்சியில் இருந்தபோது எந்த சாதனையும் செய்யாத ஸ்டாலினுக்கு பாவ மன்னிப்பு கிடையாது என்று கூறினார்.

முதல்வரின் இந்த பேச்சுக்கு பதில் அளித்துள்ள திமுக பொருளாளர் துரைமுருகன், பாவ புண்ணியங்களை பற்றி முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசக்கூடாது என்று கூறி உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-,

அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கோடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்கு சூத்திரதாரியான  முதல்வர் பழனிசாமி, பாவ புண்ணியங்களை பற்றி பேசக்கூடாது.

இருக்கும் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து புதிய பெயரைச் சூட்டிவிட்டாலே அதை பெரிய சாதனையாக நினைத்துக் கொள்கிறார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி.

புதிதாக மாவட்டத்தை உருவாக்கக் கூடாது என்று சொல்லவில்லை. அதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் எதனையும் ஓரளவாவது உருவாக்காமல் பெயர் சூட்டினால் போதும் என்று நினைக்கிறார் அவர்.

அப்படி உருவாக்கப்பட்ட தென்காசி மாவட்டத் தொடக்க விழாவில் பேசும்போது, ஒரு அரசு விழா என்பதையே மறந்து அரசியல் பேச்சை அவர் பேசி இருக்கிறார்.

ஆட்சியில் இருந்த போது எந்த சாதனையும் செய்யாத மு.க.ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது’ என்று புதிய வேடதாரியாக மாறிச் சாபம் விட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

அவர் இதுவரை செய்துள்ள பாவங்களைக் கழுவுவதற்கு எத்தனை அவதாரங்கள் எடுக்க வேண்டுமோ தெரியாது. சசிகலாவைக் கேட்டால்தான் தெரியும். இவர் எங்கள் தலைவருக்கு பாவமன்னிப்பு வழங்குவதற்குக் கிளம்பி உள்ளார்.

முதல்வர் பழனிசாமியின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது முதல் கோடநாடு வரை எத்தனையோ பாவங்களுக்குச் சூத்திரதாரிதான் இன்று முதல்வராக இருக்கும் பழனிசாமி. இவர் வாயில் பாவ, புண்ணியம் போன்ற வார்த்தைகள் வரக்கூடாது.

அதெல்லாம் பொதுவாழ்க்கையில் நேர்மையும், தூய்மையும் உண்மையும் உள்ளோர் பேச வேண்டிய பெரிய வார்த்தைகள். அதனைச் சொல்வதற்கு தகுதியற்றவர் முதல்வர் பழனிசாமி.

2006 திமுக ஆட்சியில் மு.க.ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போதுதான் மறைமுகத் தேர்தலைச் சட்டப்பேரவையில் தீர்மானமாக அறிமுகப்படுத்தினார்’ என்று முதல்வர் பழனிசாமி சொல்லி இருக்கிறார்.

இது ஒன்றும் யாரும் கண்டுபிடிக்க முடியாத உண்மை அல்ல. இப்போதைய கேள்வி என்னவென்றால், சில நாட்களுக்கு முன்புவரை ‘உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகள் நேரடியாகத் தேர்வு செய்யப்படும்’ என்று அறிவித்திருந்த முதல்வர் பழனிசாமி, இப்போது திடீரென்று தனது முடிவை மாற்றிக் கொண்டது ஏன் என்பதுதான்?

உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வாய்தாவுக்கு மேல் வாய்தா வாங்கி,  நீதிமன்றத்தால் குட்டுப்பட்டு இன்றைக்கு வேறு வழியில்லாமல் உள்ளாட்சித் தேர்தலை நடத்தியாக வேண்டிய நெருக்கடி உருவானதும் திடீரென்று மறைமுகத் தேர்தல் என்று முடிவெடுத்தீர்களே. அதற்குள் இருக்கும் மர்மம் என்ன என்பதுதான் திமுக கேட்கும் கேள்வி.

இந்த திடீர் ஞானோதயம், ஒருநாள் ராத்திரியில் உதயமானதற்கு என்ன காரணம்? தோல்வி பயம் தானே? இந்த அரசியல் உள்நோக்கத்தைத்தான் எங்கள் தலைவர் கேள்வி கேட்டார். “தோல்வி பயத்தால் மறைமுகத் தேர்தல் என்று முடிவெடுத்தீர்களா?” என்று திமுக தலைவர் கேட்டதில் என்ன தவறு இருக்க முடியும்?

மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்பது போல் மு.க.ஸ்டாலின் கூறுவது இருக்கின்றது,  அவர்கள் செய்தால் தவறில்லை; நாங்கள் செய்தால் தவறா?” என்று கேட்டுள்ளார் முதல்வர் பழனிசாமி.

மொத்தத்தில் தான் எதையோ போட்டு உடைத்துவிட்டதாக எடப்பாடி பழனிசாமி ஒப்புக்கொண்டுள்ளார். எதையோ அல்ல; அவர் உடைத்துள்ளது ஜனநாயகத்தை! என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அந்த அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.