வெற்றிக்கு  பாமக – பாதுகாப்புக்கு  பாஜக: தேமுதிகவை கழட்டிவிட அதிமுக முடிவு!

உள்ளாட்சி தேர்தல் என்பது தமிழக தேர்தல் ஆணையத்தால் நடத்தப்படும் தேர்தல், இதில் மெகா கூட்டணி என்ற இமேஜ் எல்லாம் தேவை இல்லை என்ற முடிவுக்கு வந்துள்ளது அதிமுக.

மக்களவை தேர்தலோடு நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலிலும், பாமக, தேமுதிக ஆதரவுடன்தான் அதிமுக போட்டியிட்டது.

ஆனால், வடமாவட்டங்களில் மட்டுமே, அதிமுக பல தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதற்கு பாமகவின்  பங்களிப்பு முக்கியமாக இருந்தது.

ஆனால், தென்மாவட்டங்களில் நடந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெறவில்லை. அங்கு தேமுதிகவுக்கு வாக்கு வங்கி பெரிதாக இல்லை என்பதை அதிமுக உணர்ந்தது.

அதேபோல், விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், அதிமுக மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாமகவின் பங்களிப்பை யாராலும் மறுக்க முடியாது.

அதனால், உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை, அதிமுக கூட்டணியில் பாமக கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று முதல்வர் விரும்புகிறார்.

அதேபோல், ஆட்சியை சுமூகமாமாக கொண்டு செல்ல பாஜகவின் தயவு முக்கியம். எனவே பாஜகவும் கூட்டணியில் இடம் பெறவேண்டும்.

அதேசமயம், தமது வாக்கு வங்கியை பெரிய அளவில் இழந்துள்ள தேமுதிகவை கழட்டி விட்டு விடலாம் என்றே முதல்வர் விரும்புவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில், காவிரியின் வடபகுதியில் ஒரு சில பகுதிகள் நீங்கலாக, பெரும்பாலான இடங்களில் வலுவாகவும், கணிசமாகவும் வாக்கு வங்கியை கொண்டுள்ளது பாமக.

பாமக தொண்டர்களும், எதையும் பெரிதாக எதிர்பார்க்காமல் தேர்தலில் கடுமையாக உழைக்கும் மனநிலையை அடிப்படையிலேயே கொண்டவர்கள்.

இதனால், வடமாவட்டங்களில் அதிமுக – பாமக கூட்டணி பெரும்பாலான இடங்களை கைப்பற்றும் என்று முதல்வர் உறுதியாக நம்புகிறார்.

அதேசமயம், தென் மாவட்டங்களில் பாமகவுக்கு நிகராக தேமுதிக வலுவான வாக்கு வங்கியை கொண்டிருக்கவில்லை. எனவே, அதனால், பயனில்லை என்று நினைக்கிறார்.

அத்துடன், பாமகவுக்கு நிகரான இடங்கள் வேண்டும் என்று பிரேமலதா வலியுறுத்தி வருவதை, அதிமுக விரும்பவில்லை. எனவே, தேமுதிகவை கூட்டணியை விட்டு கழட்டி விடலாமா? என்று அதிமுக ஆலோசனை செய்து கொண்டிருக்கிறது.

மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் என்பதால், கவுன்சிலர்களை ஜெயிக்க வைப்பது எளிது.

அதனால், தேவை இல்லாமல், மெகா கூட்டணி என்ற பெயரில், தேவை இல்லாமல் எதற்காக அனைத்து கட்சிகளையும் சுமக்க வேண்டும் என்ற அதிமுகவின்  எண்ணமே இதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.